லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் ஆட்கொல்லி ஓநாய்கள் கடித்து மேலும் ஒரு குழந்தை உயிரிழந்திருப்பது கிராம மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பஹ்ரைச் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் நள்ளிரவு ஓநாய்கள் ஊருக்குள் புகுந்து மனிதர்களை கொன்று வேட்டையாடி வருகிறது. இதுவரை 8 சிறுவர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டு இருந்த நிலையில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள தேப்ரா கிராமத்திற்குள் புகுந்த ஓநாய்கள், 2பெண்களை தாக்கியத்துடன் தாயுடன் தூங்கி கொண்டு இருந்த 3 வயது குழந்தையை கடித்து கொன்றுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் பீதியை ஏற்படுத்தியுள்ள ஓநாய்களை பிடிப்பதற்காக அம்மாநில அரசு ஆப்ரேஷன் பேடியா திட்டத்தை செயல்படுத்தி 4 ஓநாய்களை பிடித்துள்ளது. மேலும் 2 ஓநாய்களை ட்ரோன் மூலம் கண்டறிந்து, பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் வெவ்வேறு கிராமங்களை குறிவைத்து ஓநாய்கள் வேட்டையாடி வருவதால் கொந்தளித்துள்ள உள்ளூர் மக்கள், அரசு அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதே ஓநாய்கள் வேட்டை தொடர காரணம் என குற்றம் சாட்டி உள்ளனர். இதனிடையே ஆட்கொல்லி ஓநாய்கள் தாக்குதலுக்கு உள்ளான இடங்களுக்கு கூடுதல் அதிகாரிகளை அனுப்பும்படி, வனத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.