*கம்பம் எம்எல்ஏ, மாவட்ட கலெக்டர் பங்கேற்பு
உத்தமபாளையம் : உழவரை தேடி வேளாண்மை நலத்துறை திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழகத்தில் உள்ள 17,116 வருவாய் கிராமங்களிலும் ஓராண்டுக்குள் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. விவசாயிகளை சந்திக்கும் இந்த குழுவில், அனைத்து துறைகளின் வட்டார அலுவலர்கள், கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் ஆகியோர் இடம்பெறுவார்கள். இந்த குழுவினர் விவசாயிகளை சந்தித்து வயல்வெளி பாதுகாப்பு, பரப்பு, சாகுபடி, மகசூல் குறித்து உரிய விளக்கம் அளிப்பார்கள்.
மாதம் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் இந்த முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த முகாமினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதன்படி உத்தமபாளையம் வட்டம் உ.அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட உ.அம்பாசமுத்திரம் கிராமத்தில் நடந்த நிகழ்விற்கு தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கமபம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கலெக்டர் விவசாயிகளின் நலன் கருதி இத்திட்டம் தமிழக முதல்வரால் செயல்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகளிடம் எடுத்துரைத்து பேசினார்.
மேலும், இந்நிகழ்வில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகம்மது, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சாந்தாமணி வேளாண் துணை இயக்குனர் (தோட்டக்கலை) நிர்மலா, வேளாண் உதவி இயக்குனர் தெய்வேந்திரன், தோட்டக்கலை இணை உதவி இயக்குனர் ஜாஸ்மின், பொறியியல் துறை அதிகாரி செல்வி மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
போடி, சின்னமனூர் பகுதி
போடி உதவி வேளாண்மை இயக்குனர் முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ‘‘தமிழ்நாட்டில் அனைத்து வட்டாரங்களிலும் தலா 2 வருவாய் கிராமங்களில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களால் உழவரை தேடி வேளாண்மை முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி போடிநாயக்கனூர் வட்டாரம் உப்புக்கோட்டை, பூதிப்புரம் கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை என்ற திட்டம் துவக்கப்படுகிறது.
இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல, சின்னமனூர் அருகே சின்னஓவுலாபுரம் சமுதாய கூடத்தில் வேளாண்மைத் துறை அலுவலர்களால் இந்த முகாம் நடைபெற உள்ளது.