கோவை: யு.டி.எஸ். நிதி நிறுவனம் ரூ.150 கோடி முதலீடு பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். கோவை, பீளமேடு ராம் லட்சுமணன் நகரில் செயல்பட்டு வந்த யுனிவர்சல் டிரேடிங் சொல்யூசன் நிறுவனம் பல்வேறு திட்டங்கள் வாயிலாக, 2017ல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் பல்வேறு கிளைகளை தொடங்கி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டனர்.
முதலீடுகளுக்கு அதிக ஊக்கத்தொகை தருவதாக, பொதுமக்களிடம் இருந்து முதலீடு பெற்றது. ஆனால், உறுதியளித்தபடி முதலீட்டாளர்களுக்கு தொகை வழங்காமல் ஏமாற்றியதால், பொதுமக்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், விசாரித்து வந்த நிலையில் கடந்த 31ம் தேதி கோவையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் புகார் மேளாவை நடத்தினர்.
ஏற்கனவே ரூ.25 கோடி மோசடி என புகார் பெற்ற நிலையில் மேளாவில் ஒரே நாளில் 125 கோடிக்கு புகார்கள் பெறப்பட்டன. மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களும் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் யு.டி.எஸ். நிதி நிறுவனம் மேலும் ரூ.150 கோடி முதலீடு பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.