ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள இசிஐ சர்ச் தெருவில், எம்எல்ஏ நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலையும், மாதா கோயில் தெருவில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலையும், ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்வாய் பணிகளும், ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் அம்ருத் திட்டத்தின் கீழ் பாப்பான் குளம் சுற்றுச்சுவர் பணிகளும், ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கோட்டை மசூதியில் பூங்கா அமைக்கும் பணிகளும் என மொத்தம் ரூ.67 லட்சத்தில் பணிகள் தொடங்கி நடைபெறுகிறது.
இப்பணிகளை, திருவவள்ளூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, மாதா கோயில் தெருவில் ஒரு சில தனி நபர்கள் சாலையை ஆக்கிரமித்து தங்களது வீடுகளுக்கு படிக்கட்டுகள் அமைத்திருந்தனர். இந்த படிக்கட்டுகள் சிமென்ட் சாலை அமைப்பதற்கு இடையூறாக இருப்பதாக கருதி, பேரூராட்சியினர் சாலையில் கட்டிய படிகட்டுகளை அகற்ற முற்பட்டபோது ஆக்ரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையறிந்த உதவி இயக்குனர், செயல் அலுவலரிடம் அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி விட்டு சாலை பணிகளை தொடங்குங்கள் என உத்தரவிட்டார். பின்னர் கோட்டை மசூதி அருகில் பூங்கா பணிகளையும், பாப்பான் குளம் சுற்றுச்சுவர் பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது, பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ், பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல் ஆகியோர் உடனிருந்தனர்.