ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே வீட்டுமனை பட்டா கேட்டு கிராமமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை அருகே லச்சிவாக்கம் ஊராட்சி பத்தி நாயுடு கண்டிகை கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் ஒரு வீட்டில் 2 முதல் 3 குடும்பம் வரை வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் ஊத்துக்கோட்டை வருவாய்துறையினர் பத்தி நாயுடு கண்டிகை பகுதியில் அரசுக்கு சொந்தமான கிராம நத்தம் இடத்தில் தனிநபர்கள் சிலர் பயிர் வைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்ததை முன்னறிவிப்பின்றி அகற்றினர். மேலும் பத்தி நாயுடு கண்டிகையில் கிராம நத்தம் இடத்தை சுத்தம் செய்து வெளியூரை சேர்ந்த நபர்களுக்கு பட்டா வழங்க இருப்பதாக தகவல் பரவியது. இதனையறிந்த பொதுமக்கள் அந்த இடத்தை ஒரே வீட்டில் 2 அல்லது 3 குடும்பமாக வசித்து வரும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.