உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில் பிரசித்தி பெற்ற மனோன்மணி அம்மை சமேத ஸ்ரீஇரட்டைத்தாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு 8ம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் லட்சதீப பெருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி காலையில் கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைத்து விக்னேஷ்வர பூஜை, கலச பூஜை, யாக வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க மூலவருக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. பின்னர் இரட்டைதாலிஸ்வரர் மற்றும் மனோன்மணி அம்மையருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். மாலையில் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.
கோயில் வளாகத்தில் பக்தர்கள், நெய் தீபம் ஏற்று சுவாமியை வழிபட்டனர். இந்த தீபம், கோயில் முழுவதும் பிரகாசமாக ஜொலித்தது. தொடர்ந்து ஆன்மீக இன்னிசை கச்சேரி நடந்தது. இரவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஞானமணி உட்பட நிர்வாகிகள், பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.