உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து எதிரே வந்த பைக் மீது மோதியதில் ரயில்வே ஊழியர் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் இருந்து உத்திரமேரூர், மானாம்பதி வழியாக போளூர் அரசு பேருந்து தடம் எண் 148 நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது. உத்திரமேரூருக்கு வந்ததும் பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து, மீண்டும் போளூருக்கு பேருந்து புறப்பட்டது. பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது, மானாம்பதி அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தாறுமாறாக ஓட தொடங்கியது. அப்போது, எதிரே வந்த பைக் மீது மோதி சாலையோர மரத்தில் மோதி நின்றது. இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர். பைக்கில் வந்த உத்திரமேரூர் அருகே ராவத்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர் விஸ்வநாதன்(50) மற்றும் முத்து(47) ஆகிய இருவரும் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்த பெருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குபதிவு செய்து அரசு பேருந்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பபு ஏற்பட்டது.