புதுடெல்லி: டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘விசா விண்ணப்பதாரர்கள் கடந்த 5 ஆண்டுகளில் அவர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு சமூக ஊடக தளம் குறித்தும் அவற்றில் பயன்படுத்திய பயனர் ஐடியையும் டிஎஸ்-160 விசா விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட வேண்டும். மேலும் இந்த தகவல்கள் உண்மையானவை, சரியானவை என அவர்கள் கையொப்பமுடன் சுய சான்று அளிக்க வேண்டும். சமூக ஊடக தகவல்களை தவிர்க்கக் கூடாது. அவ்வாறு செய்யும்பட்சத்தில் விசா மறுக்கப்படலாம் அல்லது எதிர்காலத்தில் விசா பெற தகுதியின்மைக்கு வழிவகுக்கும்’ என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில் இருந்தே விசா விண்ணப்பதாரர்கள் விசா விண்ணப்ப படிவங்களில் சமூக ஊடக அடையாளங்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர் விசா பெறுபவர்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளின் தனியுரிமை செட்டிங்க்சை பப்ளிக் என மாற்ற வேண்டுமெனவும் இது சரிபார்ப்பை எளிதாக்கும் என்றும் கடந்த ஜூன் 23ம் தேதி உத்தரவிடப்பட்டது. குடியேற்ற விதிகளை டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கியதற்கு எதிராக கலிபோர்னியாவில் கடுமையான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.