வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வரி, செலவின குறைப்பு மசோதா செனட் சபையில் நேற்று முன்தினம் விவாதத்துக்கு வந்தது. இதில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. டிரம்பின் குடியரசு கட்சிக்குள்ளும் சில முணுமுணுப்புகள் இருந்ததால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து, குடியரசு கட்சி தலைவர்கள் அனைத்து செனட் சபை உறுப்பினர்களுடனும் பேசினர்.
மசோதா மீதான வாக்கெடுப்பு சனிக்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் நீடித்தது. இதில், மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 51 பேரும் எதிராக 49 பேரும் வாக்களித்தனர். எதிர்த்து வாக்களித்தவர்களில் 2 பேர் ஆளும் குடியரசு கட்சி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மசோதா, செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது மாபெரும் வெற்றி என்று அதிபர் டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.