கனடா உடனான வர்த்தகப் பேச்சு உடனடியாக ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கனடா கூடுதல் வரி விதித்ததற்கு அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கனடாவின் செயல் அப்பட்டமான விதிமீறல் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக வர்த்தகம் மற்றும் இறக்குமதி விவகாரத்தில் டிரம்ப் கடும் கெடுபிடிகளை காட்டி வருகிறார். அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய கனடாவுக்கும் வர்த்தக பேச்சு விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். கனடவை அமெரிக்காவின் மற்றொரு மாகாணம் என்று கூட பேசி அந்நாட்டை டிரம்ப் சீண்டியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் மீது கூடுதல் வரியை கனடா விதித்தது.
இதனால் கடும் கோபம் அடைந்த டிரம்ப், கனடாவின் செயல் அப்பட்டமான விதி மீறல் என்றும் அந்த நாட்டுடனான வர்த்தக பேச்சு உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, இந்தியாவுடன் விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஒவ்வொரு நாடும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட விரும்புகின்றன என்று கூறியுள்ளார்.