சென்னை: அமெரிக்காவில் இந்திய பட்ட மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த கல்வி ஆண்டில் 62.6 சதவீதம் அதிகரித்து உள்ளதாக சென்னை அமெரிக்கா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச கல்வி வாரம் நவம்பர் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடடும் வகையில் சென்னை அமெரிக்க தூதரகம் ‘ஓபன் டோர் ரிப்போர்ட்’ என்ற அறிக்கையை வெளியிட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை அமெரிக்க துணை தூதர் கிறிஸ்டோபர் ஹோட்ஜஸ், தூதரக அதிகாரிகள் ஸ்காட் ஹார்ட்மேன், மாயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் தூதரக அதிகாரிகள் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:
சர்வதேச கல்வி வாரம் நவம்பர் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ‘ஓபன் டோர் ரிப்போர்ட்’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளோம். அந்த அறிக்கை அடைப்படையில், இந்திய மாணவர்கள் படிப்பிற்காக அமெரிக்காவிற்கு வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் 4000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் 2021- 2022 கல்வி ஆண்டை காட்டிலும் 2022 -2023ம் கல்வி ஆண்டில் அமெரிக்காவில் உள்ள இந்திய சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதேபோல, இளங்கலை படிக்கும் மாணவர்கள் 16 சதவீதமும், பட்டப்படிப்பு மாணவர்கள் 62.6 சதவீதமும், ஓபிடி (OPT) எனப்படும் விருப்ப நடைமுறை பயிற்சி மாணவர்கள் 1.3 சதவீதமும் அதிகரித்து உள்ளனர்.
இந்திய மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்திட்டத்தை தேர்ந்து எடுத்து படிக்கவருகிறார்கள், அதுவும் ஆராய்ச்சிக்காக அதிக மாணவர்கள் வருகின்றனர். இந்திய-அமெரிக்க உறவை தாண்டி இரண்டு நாட்டு மாணவர்கள் இணைகின்றனர். இதனால் அவர்களது வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. கலிபோர்னியா, டெக்சாஸ் உள்ளிட்ட நகரங்களில் இந்திய மாணவர்கள் படிக்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் எஸ் திட்டம் (yes program) 10 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம்படுத்தப்பட்டது. இந்திய மாணவர்களை அமெரிக்காவுக்கும், அமெரிக்கா மாணவர்களை இந்தியாவிற்கும் அரசு செலவில் படிப்பதற்காக அனுப்பும் இந்த திட்டம் மூலம் பல்வேறு மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். தற்போது கூட 2 அமெரிக்க மாணவர்கள் தமிழ்நாட்டில் படித்து வருகின்றனர்.
மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் போது அந்த கல்லூரி பற்றி முழுவதுமாக ஆராய்ந்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும். போலி கல்லூரிக்கு விண்ணப்பித்து ஏமாறவேண்டாம். https://educationusa.state.gov/ என்ற இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி விவரங்கள் முழுமையாக இருக்கும். மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அமெரிக்கா கல்விக்கு என சமூக வலைத்தளம் உள்ளது. அதில் அனைத்து தகவல் மற்றும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.