வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் தேர்தல் வெற்றிக்காக, பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் அதிகளவில் பணம் செலவு செய்தார். அதிபர் டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றதும் அரசு செலவினங்களை குறைப்பதற்காக, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல்திறன் துறை ( என்று உருவாக்கப்பட்டது. இத்துறை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அமெரிக்க அரசுக்கு வழங்கி வந்தது. இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில், அமெரிக்க அரசின் பட்ஜெட் , எலான் மஸ்க்கின் பரிந்துரைகளுக்கு மாறாக இருந்துள்ளது.
மக்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளுடன், ராணுவ பட்ஜெட் செலவினங்களும் அதிகமாக இருந்தது. இதற்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் புதிதாக கொண்டு வந்த மசோதாவில் மின்சார வாகனங்கள் கட்டாயம் இல்லை என்ற அம்சம் இடம் பெற்றுள்ளது. இந்த மசோதா நிறைவேறிய சிறிது நேரத்தில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் 14% சரிந்து, சுமார் 150 பில்லியன் டாலர் மதிப்பு இழப்பு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த எலான் மஸ்க், புதிய மசோதாவை அருவருப்பானது என்று சாடினார்.
இதற்கு பதிலடி கொடுத்த டிரம்ப், ‘எலான் மஸ்க் உடன் எனக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது. ஆனால், இனியும் நாங்கள் அப்படி இருப்போமோ, இதை தொடருவோமோ என எனக்கு தெரியவில்லை. மஸ்க் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். பட்ஜெட் மசோதாவை ரத்து செய்யுங்கள் என்று மஸ்க் கூறினார். எல்லோரையும் விட இந்த புதிய மசோதா குறித்து மஸ்க் முழுவதுமாக அறிவார். இப்போது அவருக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. மஸ்க் எனக்கு எதிராக இருப்பது குறித்து நான் பொருட்படுத்தவில்லை.
ஆனால், அவர் இதை முன்பே செய்திருக்க வேண்டும்’ என்றார். இதற்கு உடனே பதிலடி கொடுத்த எலான் மஸ்க் ,’ நான் மட்டும் இல்லையென்றால் 2024 அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்றிருப்பார். அவர் நன்றி இல்லாதவர். டிரம்ப் பொய் சொல்கிறார். அந்த மசோதா எனது பார்வைக்கு வரவில்லை. அதிபர் டிரம்ப் எனது நிறுவனங்களின் அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து பேசினார். அந்த வகையில் ஸ்பேஸ்-எக்ஸின் டிராகன் விண்கலன் திட்டம் சார்ந்த செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துகிறது’ என்றார்.
* ரூ.12 லட்சம் கோடியை ஒரே நாளில் இழந்த மஸ்க்
டிரம்ப், மஸ்க் மோதலால் எலான் மஸ்க் நிறுவனத்திற்கு ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்கு மதிப்பு 14 சதவீதம் சரிந்து விட்டது.