நியூயார்க்: உலகில் உள்ள பல முன்னணி விளையா ட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெறும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், சக நாட்டைச் சேர்ந்த மாக்சிமிலியன் மார்டரர் உடன் மோதினார்.இந்த போட்டியில் அபாரமாக ஆடிய ஸ்வெரேவ் 6-2, 6-7 (5-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மாக்சிமிலியன் மார்டரரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல் மற்றொரு முன்னணி வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் தனது முதல் சுற்று ஆட்டத்தில் பிரேசிலின் தியாகோ செய்போத் வைல்ட்டை எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில் அனுபவ வீரரான ரூப்லெவ் 6-3, 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்கில் தியாகோ செய்போத் வைல்டை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதுபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் மரியா சக்காரி (கிரீஸ்), 80-ம் நிலை வீராங்கனையான சீனாவின் யபாங் மோதினர். இதில் முதல் செட்டை மரியா சக்காரி 2-6 என்ற கணக்கில் இழந்த நிலையில் தோள்பட்டை காயத்தால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் யபாங் வாங் வெற்றி பெற்று முதல் நபராக 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 24-ம் நிலை வீராங்கனையான டோனா வெகிச் (குரோஷியா) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் கிம்பெர்லி பிரெல்லை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
இன்னொரு ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை டாரினா கசட்கினா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஜாக்லின் கிறிஸ்டினை (ருமேனியா) வெளியேற்றினார். மற்ற ஆட்டங்களில் ரஷியாவின் எரிகா ஆன்ட்ரீவா 6-3, 7-6 (9-7) என்ற நேர்செட்டில் சீனாவின் யூ யுயானையும், பிரான்ஸ் வீராங்கனை டியானே பாரி 7-6 (7-2), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் ஜியு வாங்கையும் (சீனா), உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மரியா லோர்டெஸ் கார்லியையும் (அர்ஜென்டினா), அசரென்கா 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்டாரோதுப்ட்சேவாவை வீழ்த்தினர்.