நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலென்கா தகுதி பெற்ற நிலையில், நடப்பு சாம்பியன் கோகோ காஃப் 4வது சுற்றில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். 4வது சுற்றில் சக அமெரிக்க வீராங்கனை எம்மா நவாரோ (23 வயது, 12வது ரேங்க்) உடன் மோதிய கோகோ காஃப் (20 வயது, 3வது ரேங்க்) 3-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். இப்போட்டி 2 மணி, 12 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. எம்மா ஆஸி. ஓபனில் 3வது சுற்று, பிரெஞ்ச் ஓபனில் 4வது சுற்று, விம்பிள்டனில் காலிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு 4வது சுற்றில் களமிறங்கிய படோசா அதிரடியாக விளையாடி 6-1, 6-2 என்ற நேர் செட்களில் சீனாவின் யபான் வாங்கை எளிதில் வீழ்த்தினார். காலிறுதியில் நவாரோ – படோசா மோதுகின்றனர். பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் (28 வயது, 4வது ரேங்க்) 4வது சுற்றில் மோதிய சபலென்கா (26 வயது, 2வது ரேங்க்) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று தொடர்ந்து 4வது முறையாக யுஎஸ் ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார். குரோஷியாவின் டோனா வேகிச் 6-7 (2-7), 6-4, 2-6 என்ற செட் கணக்கில் சீனாவின் கின்வென் ஸெங்கை வீழ்த்தி 2 மணி, 50 நிமிடம் போராடி வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாபிரின் (25வயது, 28வது ரேங்க்) சவாலை சந்தித்த அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாஃபோ 6-4, 7-6 (7-3), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி, 2 நிமிடத்துக்கு நீடித்தது. டியாஃபோ தொடர்ந்து 4வது முறையாக காலிறுதியில் விளையாட உள்ளார். கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.