நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, நடப்பு சாம்பியன் நோவாக் ஜாேகோவிச் தகுதி பெற்றார். முதல் சுற்றில் மால்டோவா வீரர் ராடு அல்போட் (34 வயது, 138வது ரேங்க்) உடன் மோதிய செர்பிய நட்சத்திரம் ஜோகோவிச் (37 வயது, 2வது ரேங்க்) 6-2, 6-2, 6-4 என நேர் செட்களில் எளிதாக வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 7 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. யுஎஸ் ஓபன் ஆர்தர் ஆஷ் அரங்கில் அதிக வெற்றிகளைக் குவித்த வீரர் என்ற பெருமை ஜோகோவிச் வசமாகி உள்ளது. இந்த அரங்கில் மட்டும் அவர் 78 வெற்றிகளைக் குவித்துள்ளார். மற்ற அரங்குகளையும் சேர்த்து யுஎஸ் ஓபனில் 89 வெற்றிகளை (13 தோல்வி) பெற்றுள்ள அவர் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்து 2வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அமெரிக்காவின் ஜிம்மி கானார்ஸ் முதலிடம் வகிக்கிறார் (98 வெற்றி/17 தோல்வி).
2வது சுற்றில் சக வீரர் லாஸ்லோ ஜெரி (29 வயது, 109வது ரேங்க்) சவாலை ஜோகோவிச் சந்திக்கிறார். யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியன் டொமினிக் தீம் (ஆஸ்திரியா) 4-6, 2-6, 2-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் பென் ஷெல்டனிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். முன்னணி வீரர்கள் டெய்லர் பிரிட்ஸ், பிரான்சிஸ் டியபோ (அமெரிக்கா), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), கேஸ்பர் ரூட் (நார்வே), ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா), கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
நாகல் ஏமாற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய ஒரே இந்திய வீரர் சுமித் நாகல் (27வயது, 73வது ரேங்க்) 1-6, 3-6, 6-7 (6-8) என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் கிறிக்ஸ்பூர் டாலானிடம் (28வயது, 40வது ரேங்க்) போராடி தோற்றார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 20 நிமிடத்துக்கு நீடித்தது. மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா (26 வயது, 2வது ரேங்க்) 6-3, 6-3 என நேர் செட்களில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஹோன் பிரிஸ்கில்லாவை (26 வயது, 203வது ரேங்க்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 19 நிமிடங்களில் முடிந்தது.
நடப்பு சாம்பியன் கோகோ காஃப் தனது முதல் சுற்றில் அதிரடியாக விளையாடி 6-2, 6-0 என்ற நேர் செட்களில் வர்வரா கிரசேவாவை (பிரான்ஸ்) எளிதாக வென்றார். முன்னணி நட்சத்திரங்கள் மரியா சாக்கரி (கிரீஸ்), மேக்தா லினெட் (போலந்து), வெரோனிகா குதெர்மெடோவா, ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்தனர். பவுலா படோசா (ஸ்பெயின்), விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பார்போரா கிரெஜ்சிகோவா (செக்.), அன்னா கலினினா (உக்ரைன்) ஆகியோர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.