கவுன்சில் பிளப்ஸ்: அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் நேற்று தமிழக வீரர்கள் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர். அமெரிக்காவின் அய்யொவா மாகாணத்தின் கவுன்சில் பிளப்ஸ் நகரில் யுஎஸ் ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 2வது சுற்றுப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த அரிகரன் அம்சகருணன்/ரூபன்குமார் ரத்தினசபாபதி இணை, கனடா வீரர்கள் ஜோனதன் பிங் / நீல் யாகுரா இணையுடன் மோதினர்.
அதில் தமிழ்நாட்டு இணை அபாரமாக செயல்பட்டு 32 நிமிடங்களில் 21-10, 21-17 என நேர் செட்களில் எளிதாக வென்றனர். அதையடுத்து அவர்கள் காலிறுதிக்கு முன்னேறினர். மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீராங்கனை தன்வி சர்மா 21-18, 21-16 என நேர் செட்களில், தாய்லாந்து வீராங்கனை பிட்சாமன் ஒபட்னிபுத்தை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.