வாஷிங்டன்: சூரிய சக்தி மின்சாரத்தை விற்பனை செய்ய இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்த புகாரில், தொழிலதிபர் கவுதம் அதானி உட்பட 8 பேருக்கு அமெரிக்க கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தால் பங்குச்சந்தைகள் பெரும் இழப்பைச் சந்தித்தன. அதானி குழும பங்குகளின் மதிப்பு ரூ.2.6 லட்சம் கோடி சரிந்தது. இந்த முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம், துறைமுகங்கள், விமானத்துறை, நிலக்கரி, ரியல் எஸ்டேட், சரக்குப் போக்குவரத்து என பல்வேறு துறைகளிலும் தடம் பதித்துள்ள பிரபல இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி சிக்காத சர்ச்சைகள் இல்லை. உலக பணக்காரர்கள் வரிசையில் 2வது இடத்தில் இருக்கிறார். பங்குச்சந்தை முறைகேடு, அரசிடம் இருந்து பல கோடி மதிப்பிலான முக்கிய ஒப்பந்தங்களை சட்ட விதிகளையும் மீறி பெறுவது என இவர் மீது பல குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இந்த வரிசையில், சூரிய மின்சக்தி திட்டத்தில் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர் (ரூ.2,100 கோடி) லஞ்சம் கொடுத்ததாகவும், இந்த லஞ்சப்பணத்துக்காக தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதானி மீதான இந்த குற்றச்சாட்டுகள், பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க நீதித்துறையின், கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் பிரிவின், துணை உதவி அட்டர்னி ஜெனரல் லிசா எச் மில்லர், மேற்கண்ட குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் நீதிபதிகள் குழுவில் சமர்ப்பித்துள்ளார். அதில், ‘அதானியும், அவரது கூட்டாளிகளும், லாபகரமான சூரிய மின்சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர் லஞ்சம் கொடுத்துள்ளனர். அந்தப் பணம், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்டது. இதனால் அவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க நீதிபதிகள் குழு உத்தரவின் அடிப்படையில், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் 6 பேருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ‘பல கோடி டாலர் மதிப்பிலான திட்டங்களைப் பெறுவதற்காக லஞ்சம் தர, அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பெறவதற்காக அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பொய் தகவல்களை தெரிவித்து ஏமாற்றி மோசடி செய்துள்ளனர்’ என குறிப்பிடப்பட்டுள்ளதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டில் (இந்தியா) உள்ள சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் இந்த வாரண்ட் ஒப்படைக்கப்படும் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள மேற்கண்ட சூரிய மின்சக்தி ஒப்பந்தங்கள், 20 ஆண்டுகளில் வரிக்குப் பிந்தைய லாபமாக 200 கோடி டாலர்கள் (₹16,800 கோடி) ஈட்டக்கூடியவை. மேற்கண்ட ஒப்பந்தங்களைப் பெற லஞ்சம் தருவதற்காக, இந்திய அரசு அதிகாரிகளுடன் அதானி குழும தலைவர் கவுதம் அதானி 2020 முதல் 2024 வரை பல முறை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் குழு முன்பு அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் முக்கியக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். அதில், இந்திய மின் உற்பத்தி நிறுவனம் ஒன்று 8 கிகா வாட் மின்சாரத்தையும், அமெரிக்க நிறுவனம் ஒன்று 4 கிகா வாட் மின்சாரத்தையும் இந்தியாவின் ஒன்றிய அரசு நடத்தும் இந்திய சூரிய மின்சக்தி கழகத்துக்கு நிலையான கட்டணத்தில் வழங்க ஒப்பந்தம் பெற்றுள்ளன. இதில், அமெரிக்க நிறுவனமானது மொரீஷியசில் பதிவு செய்யப்பட்டது. இதன் பங்குகள், 2023 நவம்பர் வரை நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
மேற்கண்ட நிறுவனங்களிடம் இருந்து நிலையான கட்டணத்தில் மின்சாரத்தை வாங்கும் இந்திய சூரிய மின்சக்திக் கழகம், அதனை மாநில மின் பகிர்மான கழகங்களுக்கு விற்கும். இதற்காக லஞ்சம் கொடுத்துள்ளனர். இதற்காக, 2020 முதல் 2024 வரை தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கவுதம் அதானி சந்தித்துள்ளார் என, அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுபோல், முதலீட்டாளர்களை நம்பவைத்து ஏமாற்றியதாக கவுதம் அதானி, சாகர் அதானி, சிரில் கேபன்ஸ் ஆகியோர் மீது அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களின் எதிரொலியாக, இந்தியப் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. அதானி குழும பங்குகள் மதிப்பு₹2.6 லட்சம் கோடி சரிந்தது. இதனிடையே, இது தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால், அமெரிக்க அரசு மற்றும் பங்குச்சந்தை ஆணையங்கள் முன்வைத்துள்ள மேற்கண்ட குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரம் அற்றவை என, அதானி குழுமம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைக்கும்போதெல்லாம், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர், அதானிக்கே லாபகரமான பெரிய திட்டங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்படுகின்றன, அதானி குழும நிறுவனங்கள் ஒப்பந்த விதிகளைப் பூர்த்தி செய்யாதபோதும் அவருக்காகவே விதிகள் மாற்றப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றன. இதற்கேற்ப சாகர்மாலா திட்டத்தில் பல நெடுஞ்சாலைத் திட்டங்கள் அதானி குழும நிறுவனங்களுக்கு கைமாறிய விவகாரம், சாலை திட்டத்தில் அனுபவம் இல்லாதபோதும் அந்த துறையில் அனுபவம் உள்ள சிறிய நிறுவனத்துடன் சேர்ந்து விண்ணப்பித்து அதானி குழுமம் பலன் பெற்றது போன்ற பகீர் தகவல்கள் சிஏஜி அறிக்கை மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அதானி முறைகேடு தொடர்பாக தற்போது அமெரிக்க அரசின் குற்றச்சாட்டுகள் கடும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளன.