பாங்காங்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏப்ரல் மாதம் பல்வேறு நாடுகளுக்கும் பரஸ்பர வரியை விதித்தார். இதில் ஏற்கனவே இருந்ததை விட வரி பல மடங்கு உயர்த்தப்பட்டது. குறிப்பாக சீனாவுக்கான வரி பலமடங்கு அதிகரிக்கப்பட்டது. சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை உயர்த்தியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் ஏற்பட்டது. இந்நிலையில் மே மாதத்தில் இருந்து இரு நாடுகளும் வரி விதிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அமெரிக்கா- சீனா இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவும் சீனாவும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வார தொடக்கத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக வர்த்தக துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார். ஆனால் ஒப்பந்தம் குறித்து எந்த விவரங்களையும் அவர் குறிப்பிடவில்லை.
மேலும் அதிபர் டிரம்ப் இந்தியாவுடன் விரைவில் மிகப்பெரிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதிபர் டிரம்ப் கூறுகையில்,‘‘அமெரிக்கா இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தை செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் சிறந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டு இருக்கிறோம். அதில் ஒன்று விரைவில் வரப்போகிறது. ஒருவேளை அது இந்தியாவுடனான மிகப்பெரிய ஒப்பந்தமாக இருக்கலாம். அதிகாரிகள் நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்துகொண்டு கூடுதல் நேரம் பணியாற்றி வருகிறார்கள். நாங்கள் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். நாங்கள் அனைவருடனும் ஒப்பந்தம் செய்யப்போவதில்லை. சிலருக்கு நாங்கள் கடிதம் அனுப்பி மிக்க நன்றி கூற போகிறோம். 25சதவீதம், 35 சதவீதம், 45சதவீதம் செலுத்தப்போகிறீர்கள் என்று குறிப்பிடப்போகிறோம்” என்றார்.