புதுடெல்லி: வாக்குசதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா ரூ.181 நிதி ஒதுக்கியது இந்தியாவுக்கு அல்ல. அது வங்கதேசத்திற்கு என்று தெரிவித்த காங்கிரஸ் கட்சி, மன்மோகன் அரசை வெளிநாட்டு உதவியுடன் வீழ்த்திய பா.ஜ தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.அமெரிக்காவில் உள்ள யுஎஸ்எய்டு அமைப்பின் மூலம் உலகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதிஉதவி செய்யப்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் இந்தியாவில் வாக்குசதவீதத்தை அதிகரிக்க ரூ.181 கோடி நிதி ஒதுக்கியதாகவும், அதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு இருப்பதாகவும் அமெரிக்க அரசு துறைகளை சீரமைக்க உருவாக்கப்பட்ட அரசாங்க செயல்திறன் துறை அமைப்பின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்தார்.
இதை அதிபர் டிரம்ப்பும் உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில்,’ இந்தியாவில் வேறுயாரையோ ஆட்சியில் அமர்த்த இந்த நிதியை பைடன் அரசு ஒதுக்கியிருக்கலாம்’ என்று கருத்து தெரிவித்தார். இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் அரசியல் புயலை எழுப்பியுள்ளது. பா.ஜ நேரடியாக இந்தவிவகாரத்தில் ராகுல்காந்தி மீது குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு நேற்று காங்கிரஸ் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
யுஎஸ்எய்டு அமைப்பால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.181 கோடி நிதி வங்காளதேசத்துக்கானது, இந்தியாவுக்கானது அல்ல. இந்த விவகாரத்தில் காங்கிரசை குற்றம் சாட்டிய பாஜ மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் யுஎஸ்எய்டு மூலம் இந்தியா பெற்ற நிதியுதவி மற்றும் இந்தியாவில் உள்ள பிற அமைப்புகள் பெற்ற நிதியுதவி பற்றிய வெள்ளை அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். ஏனெனில் வாஷிங்டனில் முதலில் பொய்கள் பேசப்படுகின்றன. பின்னர் பாஜவால் பொய்கள் விரிவுபடுத்தப்படுகின்றன. இந்த பொய்கள் ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன. இந்த பொய்கள் இப்போது முழுமையாக அம்பலமானது. பொய்யர்கள் மன்னிப்பு கேட்பார்களா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா கூறியதாவது: பாஜ, மோடி அரசின் அமைச்சர்கள், அதன் பொருளாதார ஆலோசகர், கட்சியின் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர், ஆர்எஸ்எஸ்-பாஜ நட்புறவு ஊடகங்கள் மற்றும் பா.ஜவின் ஊடகப் பிரிவினர் கடந்த கால காங்கிரஸ் அரசுகளை சீர்குலைக்க வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்திய அவர்களின் சொந்த பாவங்களை மறைக்க யுஎஸ் எய்டு மூலம் ரூ.181 கோடி நிதி இந்தியாவிற்குஒதுக்கப்பட்ட விவகாரத்தை எழுப்பினர். ஆனால் ரூ.181 கோடி நிதி இந்தியாவிற்கு வழங்கப்படவில்லை.
வங்கதேசத்திற்கு வழங்கப்பட்டது என்ற உண்மை வெளிவந்துள்ளது. அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அதை நிரூபிக்கின்றன. பிரதமர் மோடியின் சிறந்த நண்பரான டிரம்ப் ஒருவேளை வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ அவர் உருவாக்கிய அரசாங்க செயல்திறன் துறை மூலம் ஒரு போலித்தனமான தகவலை பரப்பியிருக்கலாம். ஆனால் ஆர்எஸ்எஸ்-பாஜவினர் அதில் உண்மை என்னவென்று பார்க்காமல் வெட்கமின்றி அதைப் பற்றிக்கொண்டனர். இந்தியாவின் ஜனநாயகத்தை மறைக்க அவர்கள் செய்த செயல்களை இதன் மூலம் மறைக்க விரும்புகிறார்கள். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பாஜவின் சித்தாந்த முன்னோர்கள் மற்றும் பழைய ஜனதா கட்சியினர் வெளிநாட்டுத்தொடர்பை வைத்திருந்ததை சுட்டிக்காட்டினார்.
எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போதும் அதற்கு முன்னும் பின்னும் ஆர்எஸ்எஸ் சிஐஏ-வின் உதவியைப் பெற்றது என்பது இரகசியமல்ல. பி என் தார் எழுதிய ‘இந்திரா காந்தி-எமர்ஜென்சி’ மற்றும் இந்திய ஜனநாயகம்’ என்ற புத்தகம், ஜே.பி. (ஜெயபிரகாஷ் நாராயண்) நிர்வாகத்தை அமெரிக்கா எவ்வாறு பாராட்டியது என்பதையும், இந்திரா காந்திக்கு எதிராக போராடியதில் அவரது பங்கையும் தெளிவாக விவரிக்கிறது. 1971ம் ஆண்டு அமெரிக்காவை மீறி, இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனையை பின்னர் நடத்தியது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டத்தின் கீழ் அன்னா ஹசாரே-அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தை தொடங்கி திட்டமிட்டு மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை வெளிநாட்டு உதவியுடன், குறிப்பாக சர்வதேச வளர்ச்சிக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சி (யுஎஸ்எய்டு) மற்றும் போர்டு அறக்கட்டளை ஆகியவற்றின் உதவியுடன் கவிழ்த்தது. சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனவரி 21 அன்று, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, டாவோஸில் யுஎஸ்எய்டு ஏற்பாடு செய்திருந்த குழு விவாதத்தில் கலந்து கொண்டது உண்மையல்லவா? ஸ்மிருதி இரானியே இந்தியாவில் யுஎஸ்எய்டு நல்லெண்ணத் தூதராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியதாகக் கூறியது உண்மையல்லவா?.
அமெரிக்க நிறுவனங்களுடான ஒத்துழைப்பு எந்த அளவுக்கு மாநில அளவுக்கு உள்ளது என்றால், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஏன் 2022 நவம்பர் 10 அன்று யுஎஸ்எய்டு அமைப்புடன் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தார்?. இதற்கெல்லாம் பா.ஜவின் பதில் எங்கே? உலகளாவிய கூட்டாண்மைகள், வளர்ச்சி முகமைகள், யுஎஸ்எய்டு போன்ற உதவி வழிமுறைகள், நேர்மையற்றவை என்று நாங்கள் கருதவில்லை. பா.ஜ தான் முதன்முதலில் யுஎஸ்எய்டு தொடர்பான கதையை ஆரம்பித்தது. இருப்பினும், இந்திய ஜனநாயகத்தை சீர்குலைக்கவும், நமது அரசியலமைப்பை அகற்றவும் ஆர்எஸ்எஸ்-பாஜ வெளிநாட்டு ஏஜென்சிகளின் ரகசிய உதவியை பெற்று வருகிறது என்பதற்கு எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
* பிரதமர் மோடி தூங்குகிறாரா?
பவன்கேரா கூறுகையில்,’பிரதமர் மோடியை தோற்கடிக்க அமெரிக்கா ரூ.181 கோடி உதவியை வழங்கியதாக பொய்யான ஒரு கதை பரப்பப்படுகிறது. அப்படியானால், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஐபி, ரா போன்ற அமைப்புகள் எங்கே போயின? உங்கள் ஆட்சியில், இந்தியாவுக்குள் ரூ.181 கோடி வர முடிந்தால், அது பாஜவின் முகத்தில் விழுந்த அறைதானே?. தற்போது அவர்கள் தங்கள் கூற்றை மாற்றி, 2012ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
அப்படியானால், அந்த பணத்தைக் கொண்டு அவர்கள் 2014 தேர்தலில் வெற்றி பெற்றார்களா? நாங்கள் கேள்விகள் கேட்கும் போதெல்லாம் அவர்கள் தங்களுக்கு சாதகமாக அனைத்தையும் மாற்றிக் கொள்கிறார்கள். பணம் யாருக்கு வழங்கப்பட்டது என்பதை அவர்கள் நிரூபிக்கட்டும். ஒரு பெரிய தொகை வங்கதேசத்துக்குச் சென்றது தொடர்பான புலனாய்வு பத்திரிகையின் ஓர் ஆவணத்தை நாங்கள் அவர்களுக்குக் காட்டியுள்ளோம். எனவே, இப்போது பிரதமர் தூங்கிக் கொண்டிருக்கிறாரா என்று கேட்க விரும்புகிறோம். ஏனெனில், அது இந்தியாவை நேரடியாகவும் மோசமாகவும் பாதிக்கிறது’ என்றார்.
* இந்தியா மீதான தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்த வேண்டும்
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறுகையில், ‘யுஎஸ் எய்டு நிதியுதவி குறித்த கருத்துக்கள் அதிகாரம் பெற்ற ஒருவரிடமிருந்து வந்துள்ளது. பணம் கொடுக்கப்பட்டது என்பது உண்மை. இந்த விவகாரத்தில் சாணக்கிய நீதியை பயன்படுத்தி பிரச்னைகளின் வேரை அகற்ற வேண்டும். இதுபோன்ற தாக்குதலை அனுமதித்த நபர்களை அம்பலப்படுத்தப்பட வேண்டும். அத்தகைய சக்திகளுக்கு உடல் ரீதியாக அடி கொடுப்பது மக்களின் தேசிய கடமை’ என்றார்.
* இது ஒரு ஊழல் திட்டம் டிரம்ப் மீண்டும் தாக்கு
இந்தியாவில் வாக்குசதவீதத்தை உயர்த்த அமெரிக்கா ரூ.181 கோடி நிதியை ஒதுக்கியது மிகப்பெரிய ஊழல் திட்டம் என்று அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். வாஷிங்டன் நகரில் நடந்த குடியரசுக் கட்சி ஆளுநர்கள் கூட்டத்தில் பேசிய டிரம்ப்,’ இந்தியாவில் வாக்குப்பதிவு அதிகரிக்க ரூ.181 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வாக்குப்பதிவு குறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? எங்களுக்கே ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. எங்கள் சொந்த வாக்குப்பதிவு எங்களுக்கு வேண்டும். பல சந்தர்ப்பங்களில் அங்கு என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது, ஏனெனில் இது ஒரு ஊழல் திட்டம் போல் உள்ளது’ என்றார்.
* ஆழ்ந்த கவலைக்குரியவை
ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,’ சில அமெரிக்க நடவடிக்கைகள் மற்றும் நிதியுதவி தொடர்பாக அமெரிக்க நிர்வாகம் வெளியிட்ட தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளும். அதிகாரிகளும் ஆராய்ந்து வருகின்றனர். இவை வெளிப்படையாக மிகவும் ஆழமாக கவலையளிக்கின்றன. இது இந்தியாவின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு தான் இதுபற்றி மேலும் கருத்து கூற முடியும்’ என்றார்.
* ராகுல் ஒரு துரோகி பா.ஜ கடும் தாக்கு
டெல்லியில் உள்ள பா.ஜ தலைமை அலுவலகத்தில் தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில்,‘‘ உள்நாட்டு அரசியலில் தலையிடவும், இந்தியாவில் தேர்தல் அரசியலை சீர்குலைக்கவும் யுஎஸ்எய்டு நிதி இந்தியாவிற்கு வந்துள்ளது. மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2004-13 வரை ரூ.1.73 லட்சம் கோடி நிதி இந்திய அரசுக்கு வந்துள்ளது. மோடி ஆட்சியில் இதுவரை வெறும் ரூ.12 கோடி நிதி உதவி மட்டுமே வந்துள்ளது.
மோடியை தோற்கடிக்கும் முயற்சியில் தேர்தலுக்கு முன்னதாக ராகுல் காந்தியை வலுப்படுத்த பாரத் ஜோடோ யாத்திரையின் போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி அதிகரிக்கப்பட்டது. அந்த யாத்திரை இந்தியாவை உடைக்கும் நோக்கம் கொண்டது. வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டு சேர்ந்து இந்தியாவை பலவீனப்படுத்தும் ராகுல்காந்தி ஒரு துரோகி. ரூ.181 கோடி நிதி ஒதுக்கப்பட்டது இந்தியாவுக்கு அல்ல. வங்கதேசத்திற்குதான் என்று இப்போது மூடி மறைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப்பை விட வேறு யாருக்கு இந்த விவகாரம் பற்றி தெரியும்’’ என்றார்.