கீவ்: அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் மீது தீவிரவாதிகள் விமானத்தை மோத வைத்து நடத்திய பயங்கர தாக்குதலைப் போல, உக்ரைன் ஏவிய டிரோன் ரஷ்யாவில் 38 மாடி குடியிருப்பு கட்டிடம் மீது மோதி வெடித்துச் சிதறிய காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, 200 ஏவுகணை, டிரோன்களை ஏவி ரஷ்யா நடத்திய தாக்குதலால் உக்ரைனில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், மக்கள் மீண்டும் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றி உள்ள நிலையில், ரஷ்யாவின் எல்லை நகரங்களை குறிவைத்து உக்ரைன் அடிக்கடி டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் இரவிலிருந்து நேற்று காலை வரை உக்ரைன் ராணுவம் சுமார் 25 டிரோன்களை ஏவியதாக கூறப்படுகிறது. அவற்றில் 22 டிரோன்களை நடுவானில் அழித்ததாகவும் 2 டிரோன்கள் மத்திய ரஷ்யாவின் சரடோவ், யரோஸ்லாவில் குடியிருப்பு கட்டிடங்களை தாக்கியதாகவும் ரஷ்ய ராணுவம் கூறி உள்ளது.
குறிப்பாக, சரடோவில் 38 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மீது உக்ரைன் டிரோன் மோதி வெடித்து சிதறியதில் பெண் ஒருவர் பலியானார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் நேற்று வைரலாகின. கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடத்தின் மீது தீவிரவாதிகள் விமானத்தை மோத வைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே பாணியில் உக்ரைன் டிரோனும் ரஷ்ய கட்டிடத்தின் சிறு பகுதியை தகர்த்தது.
ஆனால், இந்த டிரோன் குடியிருப்பு மீது மோதவில்லை எனவும், அதை சுட்டு வீழ்த்திய போது கட்டிடம் அருகில் வெடித்து சிதறியதாகவும் ரஷ்ய ராணுவம் விளக்கம் அளித்தது. உக்ரைன் தாக்குதல் நடத்திய அதே சமயம், அந்நாட்டின் தலைநகர் கீவ் உட்பட பல பகுதிகளையும் குறி வைத்து ரஷ்யா விடியவிடிய ஏவுகணை, டிரோன்களை ஏவி அதிரடி தாக்குதல் நடத்தியது. நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில், 15 பிராந்தியங்களில் குடியிருப்பு கட்டிடங்கள், மருத்துவமனைகளை ரஷ்ய ஏவுகணை, டிரோன்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 6 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு உறுதிபடுத்தி உள்ளது.
இந்த தாக்குதல் குறிப்பாக, உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தியதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. பலமுனை தாக்குதலால் உக்ரைனின் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன. எச்சரிக்கை சைரன்கள் தொடர்ந்து ஒலிக்கப்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு மீண்டும் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர். முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பலர் குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ளனர். குடிநீர், மின்சாரம் இன்றி தவிப்பதாக பல பகுதி மக்கள் கூறி உள்ளனர். ரஷ்யாவின் இந்த தாக்குதல் உக்ரைன் மக்கள் மத்தியில் மீண்டும் பீதியை கிளப்பி உள்ளது. இன்னும் சில டிரோன்கள் உக்ரைன் வான்வெளியில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.
* உதவி கேட்கிறார் அதிபர் ஜெலன்ஸ்கி
டெலிகிராம் ஆப் மூலமாக பேட்டி அளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ‘‘ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதலில் இது மிகப்பெரியது. இதில் எங்களின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இந்த கீழ்த்தரமான தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். மத்திய கிழக்கைப் போல ஐரோப்பாவிலும் உதவிகள் தொடர வேண்டும். உயிர்களுக்கு எல்லா இடங்களிலும் ஒரே மதிப்பு உள்ளது. எனவே, ரஷ்யாவில் ஆழமான தாக்குதல் நடத்த நீண்ட தூர ஆயுதங்களை பயன்படுத்த எங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். ரஷ்யாவின் பயங்கரவாதத்தை நிறுத்த அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகள் எங்களுக்கு உதவ வேண்டும்’’ என்றார்.