சென்னை: அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சிகாகோ நகரை சென்றடைந்தார். விமான நிலையத்தில் முதல்வருக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு கடந்த 27ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். அங்கு, சான்பிரான்சிஸ்கோ நகரில் தங்கியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து வருகிறார்.
அப்போது புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் அவர் முன்னிலையில் கையெழுத்தாகின. முதலில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஆகஸ்ட் 28ம் தேதி சென்ற முதல்வர் ஸ்டாலின், முதலீட்டாளர்கள் மாநாடு, அமெரிக்க வாழ் தமிழர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த 5 நாட்கள் பயணத்தில், 4,600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 8 நிறுவனங்களுடன் ரூ.1,300 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சமூக வலைதள பதிவில் கூறும்போது, ‘‘அன்னை மண்ணை பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அனைத்துக் கொள்ளும் நம் உறவுகள். தங்களது உழைப்பாலும் – அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருந்தார். அதேபோல், சான்பிரான்சிஸ்கோவில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 31ம் தேதி கையெழுத்திடப்பட்டது.
இந்த தொழிற்சாலை செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைய இருப்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களையும் முதல்வர் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். அதன்படி கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளது முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இந்நிலையில் சான்பிரான்சிஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்டு, சிகாகோ நகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பயணம் மேற்கொண்டார். சிகாகோ விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுத்து அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு முதல்வருக்கு சிகாகோவிற்கான துணைத் தூதர் சோம்நாத் கோஷ் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
* தமிழ் உடன் பிறப்புகளுக்கு நன்றி
அமெரிக்க நாட்டின் சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து சிகாகோ சென்றடைந்த பின்பு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தள பதிவில், சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து சிகாகோ நகருக்கு வந்தடைந்தேன். பேரன்பைப் பொழிந்து வரவேற்று நெகிழவைத்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு நன்றி! என்று கூறியுள்ளார்.