வாஷிங்டன்: பாகிஸ்தான் தயாரிக்கும் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணையின் உதிரி பாகங்களை வழங்கிய 3 சீன நிறுவனங்கள் மீது நேற்று அமெரிக்கா பொருளாதார தடை விதித்து அறிவித்தது. அணு ஆயுத பரவல் தடை சட்டத்தின் கீழ் உலக நாடுகள் அணு ஆயுதங்கள் தயாரிப்பு மற்றும் கொள்முதலில் ஈடுபடும் நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. பாகிஸ்தான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட சீனா தனது ஆதரவை தாராளமாக அளித்து வருகிறது.
சமீபத்தில் பாகிஸ்தான் அபாபீல் என்ற அணு ஆயுத ஏவுகணை சோதனையை நடத்தியது. அதனையடுத்து, பாகிஸ்தானுக்கு அந்த ஏவுகணை தயாரிக்க தேவையான உதிரி பாகங்களை அளித்த சீனாவின் 3 நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, ‘பேரழிவு ஏற்படுத்தும் அணு ஆயுத தயாரிப்பு அல்லது கொள்முதல் ஆகியவற்றில் ஈடுபட எந்த நாட்டையும் அமெரிக்கா அனுமதிக்காது’ என்று தெரிவித்துள்ளார்.