உலகின் சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஆகப்போவது ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனா அல்லது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடை தெரியாமல் அமெரிக்க மக்கள் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளும் தவித்து வந்தன. இடையில் வயது மூப்பு காரணமாக பிரசாரத்தில் அதிபர் ஜோ பைடன் தடுமாற, கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்ப, வேறுவழியின்றி அவர் ஒதுங்கிக்கொண்டு, தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு வழிவிட, அமெரிக்க தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. கண்ணுக்கு தெரிந்த வெற்றி கானல் நீராக மாறிப்போகுமோ என்ற பதற்றத்தில் டிரம்ப் அணி தடுமாற, கமலாவின் செல்வாக்கு எகிற தொடங்கியது. கமலா ஹாரிஸ்தான், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் என்பது தெரிந்ததும், அமெரிக்கர்கள் மகிழ்ச்சியடைந்தார்களோ இல்லையோ, இந்தியா்கள் குறிப்பாக தமிழர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.
என்ன இருந்தாலும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட ஒரு பெண் உலகின் நம்பர் 1 நாடான அமெரிக்காவுக்கு தலைமை தாங்கப்போவது பெருமைதானே. இதுபோதாதென்று, டிரம்ப்பின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய பெண்ணான உஷா சிலுகுரியை மணந்த ஜே.டி.வான்ஸ் அறிவிக்கப்பட்டது, அமெரிக்காவின் அதிபர் தேர்தலையே சென்னை போராக, அதிலும், பெசன்ட் நகருக்கும், அடையாறுக்கும் இடையேயான போராக மாற்றிவிட்டது. கமலா ஹாரிசின் சென்னை மற்றும் தமிழ்நாட்டு தொடர்பு குறித்து கடந்த 2020 தேர்தலின்போதே பரபரப்பாக பேசப்பட்டது. உஷா சிலுகுரி ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்தானே. சென்னைக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?. உஷா சிலுகுரியின் தாத்தா ராமசாஸ்திரி சிலுகுரி. இவர், சென்னையில் கடந்த 1989ல் ஐஐடி தொடங்கப்பட்டபோது அதில் இயற்பியல் ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ளார். அப்போது முதல் அடையாறில் தான் அவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரது மகன் ராதாகிருஷ்ணா (உஷாவின் அப்பா), மகள் சாரதா ஆகியோர் அடையாறில்தான் பிறந்தனர்.
ராதாகிருஷ்ணா சென்னை ஐஐடியிலேயே படித்துவிட்டு மேற்படிப்புக்காக 1980களில் அமெரிக்கா சென்றுவிட்டு அங்கேயே குடியேறிவிட்டார். அவரது மனைவி லட்சுமி. தற்போது இருவரும் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களது மகள் உஷா சிலுகுரி கடந்த 1986ல் அமெரிக்காவில் பிறந்தார். யேல் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் சட்டம் பயின்ற ஜே.டி.வான்சை 2014ல் திருமணம் செய்துள்ளார். இந்த வான்ஸ் தான் தற்போது, டிரம்ப் அணியில் துணை அதிபர் வேட்பாளர். அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு பூர்வீகம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி. இவரது தாத்தா கோபாலன் இந்தியாவில் ஒன்றிய அரசுப் பணியில் இருந்தவர். கோபாலனின் மகள் ஷியாமளா சென்னையில் பிறந்தவர். தனது 19ம் வயதில் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று அங்கேயே குடியேறினார்.
கருப்பர் இனத்தை சேர்ந்த டொனால்டு ஹாரிஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்தவர். அவர்களுக்கு கமலா, மாயா என்று இரு குழந்தைகள். குழந்தையாக இருக்கும்போது, அடிக்கடி சென்னை வந்து, தனது தாய், தங்கையுடன் சென்னை பெசன்ட் நகரில் இருந்த தாத்தா கோபாலனின் வீட்டுக்கு பல முறை சென்றுள்ளார் கமலா. கமலா, உஷாவின் இந்திய தொடர்பு சமூக வலைதளங்களில் இப்போது அலசி ஆராயப்பட்டு வருகிறது. அத்தோடு, அமெரிக்க அதிபர் தேர்தலே சென்னை போர் என்று வர்ணிக்கும் இணையதளவாசிகள், இதில் வெல்லப்போவது பெசன்ட் நகரா அல்லது அடையாறா என்பதை நவம்பர் 5ம் தேதி நடக்கும் அதிபர் தேர்தல் முடிவு செய்யும் என்று பதிவிட்டு வருகின்றனர். அதிபர் தேர்தலில் கமலா வென்றாலும் சரி டிரம்ப் வென்றாலும் சரி அது சென்னையின் வெற்றிதான்.
பெசன்ட் நகர் கடற்கரையை மறக்காத கமலா
‘‘சென்னையில் என் தாத்தாவுடன் மிக நீண்ட நேரம் நடக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. பெசன்ட் நகர் கடற்கரையில்தான் நாங்கள் நடப்போம். அப்போது அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் பற்றி எனக்கு நிறைய கதைகள் சொல்வார். தினமும் கதை முடிந்த இடத்திலிருந்து அடுத்த நாள் நடையை ஆரம்பிக்கும்போது சொல்ல ஆரம்பிப்பார். இன்று நான் இருக்கும் நிலைக்கு அவரும் முக்கிய காரணம்’’ என கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
இந்திய வேர்கள்
இந்தியாவைப் பொருத்தவரை, தற்போது கமலா ஹாரிஸின் இரு நெருங்கிய குடும்ப உறவுகள் மட்டுமே உள்ளனர். ஒன்று டெல்லியில் வாழும் அவரது தாய்வழி மாமா கோ. பாலச்சந்திரன். மற்றொருவர் சென்னையில் வாழும் தாய்வழி சித்தி சரளா கோபாலன். உஷா சிலுகுரியை பொறுத்தவரை அவரது அத்தை சாரதா சென்னையில் மருத்துவராக இருக்கிறார். அவரது மற்ற உறவினர்கள் சென்னையிலும், ஆந்திராவிலும் வசிக்கின்றனர். அவரது நெருங்கிய உறவினரான 96 வயது சிலுகுரி சாந்தம்மா விசாகப்பட்டினத்தில் வசிக்கிறார். இன்றைக்கும் பல்கலைக்கழகங்களுக்கு சென்று கவுரவ பேராசிரியராக அவர் பணியாற்றி வருகிறார்.