நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் இன்று அதிகாலை நடந்தது. முதல் அரையிறுதியில் 2ம் நிலை வீராங்கனையான பெலாரசின் 26 வயதான அரினா சபலென்கா, 13ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் 23 வயதான எம்மா நவரோ மோதினர். இதில் முதல் செட்டை 6-3 என சபலென்கா எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டில் கடும் போட்டி நிலவியது. டைப்ரேக்கர் வரை சென்ற இந்த செட்டை 7(7)-6(2) என சபலென்கா தன்வசப்படுத்தினார். முடிவில் 6-3, 7(7)-6(2) என வெற்றி பெற்ற சபலென்கா, தொடர்ச்சியாக 2வது முறையாக யுஎஸ் ஓபனில் பைனலுக்குள் நுழைந்துள்ளார். கடந்த ஆண்டு அவர் பைனலில் கோகோ காப்பிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நடந்த மற்றொரு அரையிறுதியில் 6ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா மோதினர். இதில் முதல் செட்டை 6-1 என முச்சோவா எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டை 6-4 என ஜெசிகா பெகுலா தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை 6-2 என ஜெசிகா கைப்பற்றினார். முடிவில் 1-6, 6-4, 6-2 என ஜெசிகா பெகுலா வெற்றி பெற்று முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடர் ஒன்றில் பைனலுக்குள் நுழைந்தார். நாளை மறுநாள் நடைபெறும் பைனலில் சபலென்கா-ஜெசிகா மோதுகின்றனர்.கலப்பு இரட்டையர் பைனலில் இத்தாலியின் ஆண்ட்ரியா வவசோரி, சாரா எர்ரானி ஜோடி, 7-6, 7-5 என அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட், டொனால்ட் யங் ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.