நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்றில் 2ம் நிலை வீராங்கனையான பெலாரசின் 26 வயதான அரினா சபலென்கா 6-2, 6-4 என்ற செட் கணக்கில், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சை எளிதாக வென்று கால் இறுதிக்குள் நுழைந்தார். ஸ்பெயினின் 26 வயது பவுலா படோசா 6-1, 6-2 என சீனாவின் வாங் யாஃபனை வீழ்த்தினார். நடப்பு சாம்பியனும், 3ம் நிலை வீராங்கனையுமான அமெரிக்காவின் 20 வயது கோகோ காப் 3-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த எம்மா நவரோவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
ஆடவர் ஒற்றையர் 4வது சுற்றில் 4ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 3-6, 6-1, 6-2, 6-2 என அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமாவையும், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ, 6-4, 7-6, 2-6, 6-3 என்ற செட் கணக்கில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினையும் வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தனர். அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், 3-6, 6-4, 6-3, 6-2 என நார்வேயின் காஸ்பர் ரூட்டையும், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 7-6, 1-6, 3-6, 6-3 என ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ்வையும் வென்றனர். ஆடவர் இரட்டையரில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியாவின் ரோகன்போபண்ணா,ஆஸ்திரேலியாவின் மத்தேயு எப்டன் ஜோடி, அர்ஜென்டினா ஜோடியிடம் தோல்வி அடைந்தது.