வாஷிங்டன்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இந்திய ஆதரவாளரான மைக் வால்ட்ஸை அதிபராக பதவியேற்கவுள்ள டிரம்ப் நியமித்துள்ளார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், வரும் ஜனவரி 20ம் தேதி நாட்டின் அதிபராக பதவியேற்கிறார். அதற்கு முன்னதாக அரசின் பல்வேறு துறைகளுக்கு தலைமை அதிகாரிகள், பிரதிநிதிகள் நியமனம் நடந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஃபுளோரிடா பிரதிநிதி மைக் வால்ட்ஸை (50) நியமித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான டிரம்ப்பின் கருத்துகளுடன் ஒத்துப் போகக் கூடியவர் ஆவார். குறிப்பாக இந்தியாவுடனான உறவுகள் மற்றும் சீனாவை எதிர்ப்பது போன்ற கொள்கைகளை ஆதரிப்பவர் ஆவார். மேலும் வெளியுறவுக் கொள்கை நிபுணரான இவர், அமெரிக்க – இந்திய கூட்டணியின் தீவிர ஆதரவாளராக உள்ளார். பிரதமர் மோடி அமெரிக்காவின் கேபிடல் ஹில்லில் நடந்த நிகழ்ச்சியின் முக்கிய பங்கை மைக் வால்ட்ஸ் வகித்தார். இவ்வாறு இந்திய ஆதரவு நிலைபாடு மற்றும் சீன எதிர்ப்பு கொள்கையை ஆதரிக்கும் மைக் வால்ட்ஸை நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் செய்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.