நியூயார்க்: இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்காவில் கடந்த ஆண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதானியின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் சில சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை கைப்பற்ற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும், அந்த ஒப்பந்தங்களுக்கான முதலீட்டை அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் பெற்று வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. சுமார் ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுத்ததாக அதானி குழுமம் மீது அமெரிக்கா முதன்முறையாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் வர்த்தகம் மேற்கொண்டு வரும் அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் அந்த நிறுவனத்திற்கு பெரும் நெருக்கடியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் அதானி மட்டுமின்றி, வினித் எஸ் ஜெய்ன் ரஞ்சித் குப்தா உட்பட 7 நபர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் அதானி குழுமம் மட்டுமின்றி அஜூர் என்ற நிறுவனத்தின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்து, இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் கூறியுள்ளது. இதுபற்றிய விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவின் பிடியில் மீண்டும் ஒரு முறை அதானி நிறுவனம் சிக்கியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா விதித்த தடையை மீறி அந்த நாட்டிடம் இருந்து அதானி குழுமம் வர்த்தகம் செய்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேடு வெளியிட்ட செய்தியின்படி ஈரானில் இருந்து குறிப்பிடப்பட்ட ஒரு சரக்கு போக்குவரத்து மூன்றாம் தரப்பு மூலம் வழக்கமான வணிக பரிவர்த்தனையாக கையாளப்பட்டது.
அந்த சரக்கு அதானிக்கு சொந்தமான குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. ஈரானிய எண்ணெய் அல்லது பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்கும் எந்தவொரு தரப்பினரும் உடனடியாக இரண்டாம் நிலை தடைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். அதையும் மீறி அதானி குழுமம் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக தற்போது புகார் எழுந்து, அதன் அடிப்படையில் அதானி குழுமம் மீது அமெரிக்கா 2வது முறையாக விசாரணையை தொடங்கி உள்ளது. அதானிக்கு சொந்தமான குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் வழியாக இந்தியாவிற்கு ஈரானிய எல்பிஜி கேஸ் இறக்குமதி செய்ததாகவும், அதானி எண்டர்பிரைசஸுடன் இணைக்கப்பட்ட கப்பல்கள் மூலம் இவை இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தான் தற்போது புகார் எழுந்து உள்ளது.
இதை அமெரிக்கா ஆய்வு செய்து வருகின்றது. மேலும் அதானி எண்டர்பிரைசஸுக்கு சரக்குகளை அனுப்புவதாக சந்தேகிக்கப்படும் எல்பிஜி டேங்கர்களை அமெரிக்க நீதித்துறை விசாரித்து வருவதாக தி வால் ஸ்ட்ரீட் கூறியுள்ளது. ஈரான் எல்பிஜி டேங்கர்களை இந்தியாவிற்கு கொண்டு செல்ல போலி ஆவணங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஏனெனில் அமெரிக்கா விசாரணையில் பெயரிடப்பட்ட ஒரு முக்கிய கப்பல் எஸ்எம்எஸ் பிராஸ், இப்போது நீல் என மறுபெயரிடப்பட்டுள்ளது. இந்த கப்பல் வழித்தட தகவல்களை மறைக்கும் அறிகுறிகள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பதிவுகள் மூலம் பார்க்கும் போது இந்த கப்பல் கடந்த 2024 ஏப்ரல் 3 அன்று ஈராக்கில் நிறுத்தப்பட்டிருப்பதைக் காட்டியிருந்தாலும், செயற்கைக்கோள் படங்கள் அதற்கு பதிலாக கப்பலை ஈரானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை காட்டுகிறது.
பின்னர் அந்தக் கப்பல் முந்த்ரா துறைமுகத்திற்கு சரக்குகளை வழங்கியுள்ளது. ஆனால் சரக்கு கொண்டு செல்லப்பட்ட கப்பல் ஆவணங்கள் ஓமன் நாட்டின் சோஹர் என்று குறிப்பிடுகின்றன. ஆனால் கப்பல் வழித்தட தகவல்கள் ஓமன் ெசன்றதாக குறிப்பிடவில்லை. எல்பிஜி இறக்குமதி என்பது அதானியின் வணிகத்தின் ஒரு சிறிய பகுதியாகும். ஆனால் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கும் ,பாரசீக வளைகுடாவிற்கும் இடையில் இயங்கும் பல கப்பல் டேங்கர்கள் வர்த்தக தடைகளை மீறியிருக்கலாம் என்று அமெரிக்கா விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஈரானில் இருந்து எல்பிஜி டேங்கர்கள் இந்த வழித்தடங்கள் வழியாக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகப்படுகிறது. 2025 நிதியாண்டில் அதானி வருவாயில் 1.46% பங்களிக்கிறது என்றாலும் ஈரான் மீதான தடையை மீறி அதானி குழுமம் வர்த்தகம் செய்துள்ளதாக அமெரிக்கா தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இது அதானி குழுமத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டத்தைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டுடன் வர்த்தகம் செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. காசா மோதலுக்குப் பிறகு, ஹமாஸ், ஹவுத்திகள், ஹிஸ்பொல்லா போன்ற குழுக்களின் முக்கிய ஆதரவாளராகக் கருதப்படும் ஈரான் மீது அமெரிக்கா மேலும் தடைகளை விதித்துள்ளது.
அதானி குழுமம் மறுப்பு
அமெரிக்கா விசாரணை குறித்து அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,’ அதானி குழுமம் ஈரான் நாட்டில் இருந்து எல்பிஜி இறக்குமதி செய்ததை திட்டவட்டமாக மறுக்கிறது. இதற்காக அதானி நிறுவனம் ஒரு மூன்றாம் தரப்பு கப்பலை பயன்படுத்தியதாக கூறப்படும் புகாரில் உண்மை இல்லை. இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. குறும்புத்தனமானது. இந்த விசயத்தில் அமெரிக்காவின் விசாரணை பற்றி எங்களுக்குத் தெரியாது.’ என்று தெரிவித்தார்.