வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரிச் சலுகைகள் மற்றும் அரசின் செலவு குறைப்பு மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டு, சட்டத்தை அமல்படுத்தினார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், வரிச் சலுகைகள் மற்றும் அரசின் செலவுகளை குறைக்கும் வகையில் ‘ஒன் பிக் பியூட்டிபுல் பில்’ எனும் நிதி மசோதாவை அவர் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். கடந்த 2017ல் டிரம்ப் தனது முதல் ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த வருமான வரி குறைப்பு சட்டம் இந்த ஆண்டு இறுதியில் காலாவதியாகிறது. அதை இந்த மசோதா நீட்டிக்கிறது. இதன் மூலம் 4.5 டிரில்லியன் டாலர் (383 லட்சம் கோடி ரூபாய்) வரிகளை குறைக்கிறது.
இந்த வரி குறைப்பு அதிக வருமானம் ஈட்டக்கூடியவர்கள், தொழிலதிபர்கள், பணக்காரர்கள் மட்டுமே அதிகளவில் பயனடைவார்கள். மேலும், அரசின் செலவுகள் குறைப்பு என 1.2 டிரில்லியன் டாலருக்கு (ரூ.102 லட்சம் கோடி) மருத்துவ உதவி, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவு வவுச்சர்கள் போன்ற திட்டங்கள் குறைக்கப்படுகின்றன. குடியேற்ற விதிகளை கடுமையாக்கும் இந்த மசோதா, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சலுகைகளையும் பறிக்கிறது. மருத்துவ உதவி திட்டத்தில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையையும் கணிசமாக குறைக்கிறது.
இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத உச்சத்தை எட்டும் என அதிபர் டிரம்பும், இது ஏழை, நடுத்தர மக்களின் பணத்தை பறித்து பணக்காரர்களுக்கும் தரும் மசோதா என்று எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்பிக்களும் கூறுகின்றனர். இதற்கிடையே, அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா சுமார் 29 மணி நேர விவாதத்திற்கு பிறகு பிரதிநிதிகள் அவையில் 218-214 என்ற வாக்கு வித்தியாசத்திலும், செனட் அவையில் 51-50 என்ற வாக்குகள் வித்தியாசத்திலும் நிறைவேற்றப்பட்டது. செனட் அவையில் இறுதி வாக்கை துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் செலுத்தி மசோதாவை வெற்றி பெறச் செய்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது, 2வது ஆட்சியில் அதிபர் டிரம்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
* 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்து
வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது,’ 12 நாடுகளுக்கான வரி கடிதங்களில் கையெழுத்து இட்டுவிட்டேன். அந்த நாடுகள் எவை எவை என்பது திங்கள் கிழமை வெளியிடப்படும். ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு வரி விகிதம் அதிகரிக்கப்படும். அது அதிகபட்சம் 70% வரை இருக்கும். புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும்’ என தெரிவித்துள்ளார்.
* டிரம்புக்கு மோடி தலை வணங்குவார்: ராகுல்காந்தி
அமெரிக்க வர்த்தகம் தொடர்பாக ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ‘அமெரிக்கா உடனான முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக இறுதி செய்யப்பட்டால் மட்டுமே தேசிய நலன் கருதி இந்தியா அதனை ஏற்றுக்கொள்ளும்’ என்று தெரிவித்து இருந்தார். இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில்,‘‘பியூஷ் கோயல் என்ன வேண்டுமானாலும் கூறலாம். எனது வார்த்தையை கவனியுங்கள். பிரதமர் மோடி அமெரிக்க அதிபரின் காலக்கெடுவை தலைவணங்கி ஏற்றுக்கொள்வார்” என்று குறிப்பிட்டுள்ளார்.