Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு எக்ஸ் தளத்தை விட்டு வெளியேறிய 1.15 லட்சம் பேர்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, எக்ஸ் தளத்தில் இருந்து 1.15 லட்சம் பயனர்கள் வெளியேறியுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இவருக்கு தேர்தலில் தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஆதரவு தெரிவித்தனர். எலான் மஸ்க் பெரிய அளவில் தேர்தல் நிதியும் வழங்கினார். அவருக்கு ஆதரவாக பல்வேறு விதமான பிரசாரத்தையும் வெளிப்படையாக மேற்கொண்டார். டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு அரசு செயல்திறன் மேம்பாட்டு துறை தலைமை பதவியை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான இந்த துறையை மஸ்க்குடன் இணைந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியும் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் மஸ்க்கின் செல்வாக்கை பயன்படுத்தியதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். டிஜிட்டல் நுண்ணறிவு தளமான சிமிலர்வெப் வெளியிட்ட அறிக்கையின்படி, ‘தேர்தலுக்கு அடுத்த நாள் முதல் எக்ஸ் தளத்தை வலைதளம் மூலமாக பயன்படுத்தும் 1.15 லட்சம் பேர் தங்களின் கணக்கை செயலிழக்க செய்துள்ளனர். இதில், மொபைல் செயலி மூலம் எக்ஸ் பயன்படுத்தி செயலிழக்க செய்தவர்களின் எண்ணிக்கை கணக்கிடவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 90 நாள்களில் மட்டும் அமெரிக்காவில் பிரபலமடைந்து வரும் ப்ளூ ஸ்கை சமூக ஊடகத்தின் பயனர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 லட்சம் புதிய பயனர்கள் வந்ததையடுத்து, ப்ளூஸ்கை தளத்தின் பயனர்கள் எண்ணிக்கை 1.5 கோடியாக அதிகரித்துள்ளது. பிரபல செய்தி நிறுவனமான ‘தி கார்டியன்’ அதிபர் தேர்தலில் மஸ்க்கின் தலையீட்டுக்கு கவலை தெரிவித்து, எக்ஸ் தளத்தில் இருந்து விலகுவதாக நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனத்தின் 80க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கிலிருந்து பதிவிட போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ் நிறுவனத்தை தொழிலதிபர் எலான் மஸ்க், கடந்த 2022ம் ஆண்டு வாங்கிய பிறகு அதிகளவிலான பயனர்கள் வெளியேறியது இதுவே முதல்முறையாகும்.