வாஷிங்டன்: அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழவில்லை; வாஞ்சையோடு அணைக்கும் உறவுகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக கடந்த 27ம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு சான்பிரான்சிஸ்கோ நகரை 28ம் தேதி சென்றடைந்தார். மேலும், சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
தொடர்ந்து, சிகாகோ நகருக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த 17 நாள்கள் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 12ம் தேதி சென்னை திரும்புகிறார். இந்நிலையில், அமெரிக்க சுற்றுப்பயணத்தில் ஜாகுவார் நிறுவனத்தின் டிரைவர் இல்லாத தானியங்கி காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்துள்ளார். அந்த காரில் முதல்வர் பயணித்த காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
மேலும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில், அங்கு செல்லும் இடமெல்லாம் தமிழர்கள் அளிக்கும் வரவேற்பை கண்டு தாம் நெகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியதாவது;
“அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள்!
தங்களது உழைப்பாலும் – அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்!”இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.