வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக ஜனநாயக கட்சி தலைவர்கள் தயாராக வரும் நிலையில், சமீபத்திய கருத்து கணிப்பில் டொனால்ட் டிரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மாகாணங்கள் முழுவதும் பயணித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு எதிராக துணை அதிபர் கமலா ஹாரிஸை களமிறக்க முடிவு செய்துள்ள ஜனநாயக கட்சி இன்று அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிகாகோவில் நடைபெறும் ஜனநாயக கட்சியின் மாநாட்டில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இந்நிலையில், வாஷிங்டன் போஸ் ஏபிசி நியூஸ் கருத்து கணிப்பின்படி கமலா ஹாரிஸ் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்பை விட முன்னிலை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸுக்கு 49% ஆதரவும் உள்ள நிலையில் டிரம்புக்கு சற்று நெருக்கமாக 45% ஆதரவு உள்ளதாக கருத்து கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. செப்டம்பர் 10ம் தேதி நடைபெற உள்ள அதிபர் வேட்பாளர்களின் நேரலை விவாதத்துக்கு பிறகு இந்த முடிவுகளின் போக்கு மாறலாம் என்று அமெரிக்க தேர்தல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.