வாஷிங்டன்: டிரம்ப் நிர்வாகத்தை விட்டு வெளியேறுவதாக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். அதன் பின்னர் எண்ணற்ற சட்ட திருத்தங்கள் செய்த டிரம்ப் அமெரிக்க அரசின் செயல்திறனை அதிகரிக்க, அரசாங்க செயல்திறன் துறை ‘டாட்ஜ்’ உருவாக்கினார். இந்த துறைக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கை தலைமை அதிகாரியாக நியமனம் செய்தார். மஸ்க் பொறுப்பேற்ற பின் இதுவரை அரசின் செலவுகளில் 10 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகவுள்ளதாக தகவல் வெளியானது. மஸ்க் இந்த பதவியில் 130 நாள் பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார். அவரின் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிவடைகிறது. இந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்தை விட்டு வெளியேறுவதாக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், “சிறப்பு அரசு ஊழியர் என்ற எனது பணிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில், வீண் செலவுகளைக் குறைப்பதற்கான பணியில்(Dodge) ஈடுபட வாய்ப்பளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அரசாங்கம் முழுவதும் வாழ்க்கை முறையாக மாறும்போது, DOGE பணி காலப்போக்கில் வலுப்பெறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.