நியூயார்க்: முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது. டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கோப்பையை கைப்பற்ற நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), உலகின் நம்பர் 1 வீரர் யானிக் சின்னர் (இத்தாலி), ஸ்பெயின் நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ், அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), டானில் மெட்வதேவ் (ரஷ்யா) ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் கோகோ காஃப் (அமெரிக்கா), நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), அரினா சபலெங்கா (பெலாரஸ்), எலனா ரைபாகினா (கஜகஸ்தான்), ஜாஸ்மின் பவோலினி (இத்தாலி), ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா) உள்பட முன்னணி வீராங்கனைகள் பட்டம் வெல்லும் முனைப்புடன் வரிந்துகட்டுகின்றனர்.
இது வரை 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட் உடன் சமநிலை வகிக்கும் ஜோகோவிச், 25வது பட்டத்துடன் உலக சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்தில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற உற்சாகத்துடன் நியூயார்க் வந்துள்ள ஜோகோவிச், ‘வழக்கம் போல பட்டம் வெல்வதே இலக்கு. அதில் எந்த மாற்றமும் இல்லை’ என தெரிவித்துள்ளார். அவர் தனது முதல் சுற்றில் மால்டோவா வீரர் ராடு அல்பாட் உடன் மோதுகிறார்.