நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் விளையாட இந்தியாவின் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் (ஆஸி.) இணை அரையிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் அமெரிக்காவின் நதானியேல் லம்மான்ஸ் – ஜாக்சன் வித்ரோ ஜோடியுடன் (15வது ரேங்க்) மோதிய போபண்ணா – எப்டன் இணை (6வது ரேங்க்) 7-6 (12-10), 61 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தியது. முதல் செட்டில் டை பிரேக்கர் வரை விடாப்பிடியாகப் போராடிய அமெரிக்க ஜோடி, 2வது செட்டில் எதிர்ப்பின்றி சரணடைந்தது. விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 28 நிமிடங்களுக்கு நீடித்தது.
யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு போபண்ணா 3வது முறையாக தகுதி பெற்றுள்ளார். ஏற்கனவே 2010, 2011ல் அவர் அரையிறுதியில் விளையாடி உள்ளார். அதிலும் 2010ல் பைனல் வரை முன்னேறினார். அப்போது அவரது ஜோடியாக பாகிஸ்தான் வீரர் அய்சம் உல் குரோஷி விளையாடியது குறிப்பிடத்தக்கது. அரையிறுதியில் பிரான்ஸ் வீரர்கள் பியரி ஹெர்பர்ட் – நிகோலஸ் மஹூத் இணையுடன் போபண்ணா ஜோடி மோதுகிறது.
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் லாத்வியாவின் யெலனா ஆஸ்டபென்கோவுடன் (26 வயது, 21வது ரேங்க்) மோதிய அமெரிக்க இளம் நட்சத்திரம் கோகோ காஃப் (19 வயது, 6வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-0, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 8 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு காலிறுதியில் செக் குடியரசின் கரோலினா முச்சோவா (27 வயது, 10வது ரேங்க்) 6-0, 6-3 என்ற நேர் செட்களில் ருமேனியா வீராங்கனை சொரானா சிர்ஸ்டியாவை (33 வயது, 30வது ரேங்க்) வீழ்த்தினார். அரையிறுதியில் கோகோ – முச்சோவா மோத உள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதயில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் (20 வயது, 47வது ரேங்க்) 6-2, 3-6, 7-6 (9-7), 6-2 என்ற செட் கணக்கில் 3 மணி, 7 நிமிடம் போராடி சக வீரர் பிரான்சிஸ் டியபோவை வீழ்த்தினார். அரையிறுதியில் அனுபவ வீரர் ஜோகோவிச் (36 வயது, 2வது ரேங்க்) உடன் பென் ஷெல்டன் மோதவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.