*மலர்தூவி விவசாயிகள் வரவேற்பு
ஸ்ரீவைகுண்டம் : ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ கோரிக்கை எதிரொலியாக மருதூர் மேலக்காலில் திறக்கப்பட்ட தண்ணீர், வெள்ளூர் குளம் கால்வாயை வந்தடைந்தது. விவசாயிகள் மகிழ்ச்சியுடன் மலர்தூவி தண்ணீரை வரவேற்றனர்.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள், கடந்த சில ஆண்டுகளாக வறட்சி, மழை வெள்ளம், காற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாகுபடி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். நீர்வளத் துறையினரின் அலட்சியப் போக்காலும் தவறான நீர்பகிர்மான திட்டங்களாலும் உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் அறுவடை காலங்களில் பெரும் இழப்பை சந்திக்கின்றனர்.
இந்தாண்டிற்கான கார் சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மருதூர் மேலக்காலில் தண்ணீர் திறக்கப்படாததால் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் மருதூர் மேலக்கால் மூலம் பாசன வசதி பெறும் வெள்ளூர் குளம் மற்றும் தென்கரை குளம் உள்ளிட்ட 16 குளங்கள் வறண்ட நிலையில் காட்சியளிக்கின்றன. நீர்வளத் துறையினரின் காலதாமதமான பாலம் சீரமைப்பு பணிகளால் மருதூர் மேலக்காலில் தண்ணீர் திறக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியான நிலையில், மருதூர் மேலக்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் மருதூர் மேலக்காலில் நேற்று முன்தினம் 21ம் தேதி முதல் கார் சாகுபடிக்காக விநாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. வெள்ளூர் குளக்கால்வாயை வந்தடைந்த தண்ணீரை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் மலர்தூவி வரவேற்றனர். கோரிக்கையை ஏற்று மருதூர் மேலக்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டதற்காக தமிழக முதல்வருக்கு நன்றியும் தெரிவித்தனர்.
இதுகுறித்து வெள்ளூரை சேர்ந்த விவசாயி முருகன் கூறுகையில், மருதூர் மேலக்காலில் வெள்ளூர் குளத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரி கோரிக்கை விடுத்தோம். இதனையேற்று திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது வெள்ளூர் குளத்திற்கு வந்துள்ளது.
தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கும், நீர்வளத் துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், என்றார். விவசாயிகள் ராம், கந்தசாமி கூறியதாவது: நெல், வாழை என கருகிய பயிர்களை காப்பாற்ற வழியில்லாமல் கவலையில் இருந்தோம்.
ஆனால் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு வெள்ளூர் குளத்திற்கு வரத்துவங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பாபநாசம் அணையில் நீரிருப்பு அதிகமாக இருப்பதால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தாமதமான 10 நாட்களுக்கு சேர்த்து மருதூர் மேலக்காலில் கூடுதலாக 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும், என்றனர்.
எம்எல்ஏவுக்கு நன்றி
கடந்த சில ஆண்டுகளாக முழுமையாக சாகுபடி செய்யப்படாத நிலையில், கார் சாகுபடிக்கு மருதூர் அணை மேலக்காலில் தண்ணீர் திறந்து விட வழிவகை செய்ய வேண்டுமென ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து மருதூர் அணை மேலக்காலில் கார் சாகுபடிக்காக விநாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.