பெரும்பாலானவர்களுக்கு அடிக்கடி தொல்லை தரும் விஷயம், நீர் கடுப்பு மற்றும் சிறுநீர் தொற்று பிரச்னை. இந்த சிறுநீர் தொற்று அதிகரிக்கும்போது, அரிப்பு ஏற்படுகிறது. இதனால், வெளியிடங்களுக்கு செல்லும்போது, பெரும் தொந்தரவை பலரும் சந்திக்கின்றனர். இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட, இயற்கை முறையில் தீர்வு சொல்கிறார் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என். ராதிகா.
சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும்போதுதான், எரிச்சல் உணர்வுடன் சிறுநீர் கழித்தல் வலியுடன் சிறுநீர் போவது, சொட்டு சொட்டாக சிறுநீர் கழித்தல். அடிவயிற்றில் வலி ஏற்படுவது. சிறுநீர் கழிக்கும் போது துர்நாற்றம் வருவது. சிறுநீர் பையில் எப்போதும் சிறுநீர் தேங்கியிருப்பது போன்ற உணர்வினால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவது. சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது அல்லது ரத்தம் கலந்து போவது அடி முதுகில் வலி ஏற்படுவது மற்றும் சிறுநீர் கழிக்கும் இடத்தில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாவது போன்றவை ஏற்படுகிறது.
சிறுநீர் தொற்று யாருக்கெல்லாம் வருகிறது? எதனால் வருகிறது?
பொதுவாக, சிறுநீர் தொற்று உடலில் பேக்டீரியா அதிகரிக்கும்போதுதான் இதுபோன்ற சிறுநீர் வருகிறது. இது ஆண்களைவிட பெண்களுக்கே சிறுநீர் தொற்று அதிகளவில் வருகிறது. ஏனென்றால், ஆண்களைவிட பெண்களுக்கு சிறுநீர் குழாயின் அளவு சற்று குறைவாக இருக்கும். இதனால், பெண்களுக்கு அதிகளவில் சிறுநீர் தொற்று ஏற்படுகிறது.
இது ஏற்பட என்ன காரணம் என்று பார்த்தால், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது. சுத்தமில்லாத கழிவறையை பயன்படுத்தும்போது, சிறுநீர் தொற்று இருப்பவர்கள் பயன்படுத்திய கழிவறை சரியாக சுத்தமாகாமல் இருந்து, அது தெரியாமல் அடுத்தவர் பயன்படுத்தும்போது இதுபோன்ற சிறுநீர் தொற்று ஏற்படுகிறது.
அதுபோன்று சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீர் தொற்று வருவது அதிக வாய்ப்பு உண்டு. ஏனென்றால், சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு சீக்கிரம் தொற்று தொற்றிக் கொள்ளும். மேலும், அவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உபாதை இருப்பதால், அவர்களால் வெகுநேரம் சிறுநீரை அடக்க முடியாது. எனவே, பொது இடங்களை அவர்கள் பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார்கள். இதுவும் அவர்களுக்கு அதிகளவில் தொற்று ஏற்பட காரணமாகிறது.
நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீர் தொற்று நீங்க தீர்வு என்னென்ன?
சிறுநீர் எரிச்சலாக போகிறது என்றாலே, உடலில் பொதுமான அளவு தண்ணீர் இல்லை என்று அர்த்தம். இதனால் சிறுநீர் அடர்த்தி அதிகமாகி, துர்நாற்றத்துடன் போகிறது. எனவே, சிறுநீர் கழிக்கும்போது, எரிச்சல் உணர்வு இருந்தால், அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் நேரடியாக அதிகளவில் குடிக்க முடியவில்லை என்றால், பழச்சாறுகளாகவோ, மோராகவோ, இளநீராகவோ தினசரி குடித்து வரும்போது, சிறுநீர் பாதை சீராகி தொற்று விரைவில் குணமாகும்.
மேலும், சீரகம் போட்டு காய்ச்சிய தண்ணீருடன் எலுமிச்சை சேர்த்து அருந்துவது மிகவும் நல்லது. வெந்தயம் கொதிக்க வைத்த தண்ணீராகவோ அல்லது வெந்தயம் ஊற வைத்த தண்ணீரில் எலுமிச்சை சாறு சில துளிகள் விட்டு குடித்து வருவது மிகவும் நல்லது. மேலும், சர்க்கரை நோயாளிகள் இதை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது, சிறுநீர் தொற்றில் இருந்து நிவாரணம் கிடைப்பதுடன், சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும்.
பார்லி அரிசியுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, அந்த நீரை வடிக்கட்டி குடித்து வர, தொற்றுகள் விரைவில் குணமாகி எரிச்சல், வலி போன்றவற்றை கட்டுப்படுத்தும். அதனால், நிறைய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதுபோன்று பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளும்போது, வெள்ளை சர்க்கரை சேர்க்காமல், பனங்கற்கண்டோ, பனை வெல்லமோ சேர்த்து குடிக்க வேண்டும். ஏனென்றால், பனைவெல்லம் குளிர்ச்சி தன்மை உடையது என்பதால், உடலின் சூட்டை வெகுவாக குறைத்து விரைவில் நிவாரணம் தரும்.
வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்கள்
வைட்டமின் சி சத்து அதிகளவு உள்ள பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, பைனாப்பிள், கொய்யா, தர்பூசணி, மாதுளை போன்ற பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது. இதனை பழமாகவோ அல்லது ஜூஸ்ஸாகவோ எடுத்துக்கொள்ளலாம். சீரகம் கொதிக்க வைத்த தண்ணீருடன் திராட்சை சேர்த்து கொதிக்கவிட்டு அருந்தலாம்.
நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள்
நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான சுரைக்காய், புடலங்காய், பீர்க்கன், செளசெள, முள்ளங்கி முட்டைகோஸ், வெண் பூசணிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை தொற்று இருக்கும்போது உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுபோன்று, வாழைத்தண்டுடன், சுரைக்காய் துண்டுகள் சிலவற்றை சேர்த்து, ஜூஸ்ஸாக செய்து எடுத்துக் கொள்ளலாம்.
ப்ரோ பயாடீக்ஸ்
ப்ரோ பயாடிக் என்பது தயிர், மோரில் உள்ள லாக்டோ பாசில்ஸ் என்கிற நல்ல பாக்டீரியாதான். எனவே, மோர் அதிகளவில் எடுத்துக் கொள்ளும்போது, லாக்டோ, பாசிலஸ் எனும் நல்ல பாக்டீரியா உள்ளே சென்று, உடலில் தங்கியிருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதற்கு உதவுகிறது அதுபோன்று சர்க்கரை நோயாளிகள், மோருடன் கால் தேக்கரண்டி வெந்தயம் வறுத்துப் பொடித்ததை சேர்த்து கலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மூலிகைகள்
தினசரி நெருஞ்சில் பொடி 1 தேக்கரண்டி அளவு எடுத்து 1 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வரலாம்.புனர்னவா என்கிற முக்கிரட்டை கீரை, கீரைக்காரர்களிடம் கிடைக்கும். அதனை வாங்கி பயன்படுத்தலாம், அல்லது முக்கிரட்டை பொடியை வாங்கியும் பயன்படுத்தலாம். இதுவும், 1 டம்ளர் தண்ணீருக்கு 1 தேக்கரண்டி என்ற விதத்தில் கொதிக்க வைத்து குடித்து வரலாம்.நீர்முள்ளி மூலிகை சிறந்த நிவாரணம் தரும். இது சிறுநீர் தொற்று மட்டுமில்லாமல், சிறுநீர் பையில் உள்ள கல்லடைப்பு மற்றும் எரிச்சலுடன் சிறுநீர் பிரிவது போன்றவற்றிற்கும் நல்ல நிவாரணம் தரும்.
2 டம்ளர் தண்ணீரில் 1 துண்டு பட்டை, 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிக்கட்டிக் கொண்டு, அதடன், எலுமிச்சை பழம் அரை மூடி பிழிந்து அதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர, சிறு நீர் எரிச்சல், சிறுநீர் தொற்று விரைவில் குணமாகும்.
அரிப்பு குணமாக..
சிறுநீர் கழிக்கும் இடத்தில் அரிப்பு ஏற்பட தொற்றுதான் காரணம், அதனால் தொற்றை சரி செய்தாலே, அரிப்பு நீங்கிவிடும். அதற்கு, திரிபலா சூரணம் 1 தேக்கரண்டி எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து, வைத்துக் கொண்டு சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் அந்த நீரால், அலசிவிட்டு, ஈரம் இல்லாமல், டிஷூவை வைத்து அந்த இடத்தை துடைத்துவிட வேண்டும்.
மேலும், அறுகம்புல் எண்ணெயை வீட்டிலேயே தயார் செய்து வைத்துக் கொண்டு அந்த எண்ணெயை இரவில் படுக்கும் முன்பு அந்த இடத்தில் தடவி வர, அரிப்பு நீங்கி அதனால் ஏற்பட்ட புண்களும் ஆறிவரும்.
தொகுப்பு: ஸ்ரீதேவி