சென்னை: உயர்கல்வித்துறையில் பொதுப்பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொதுப்பாடத் திட்டம் என்ற பெயரில் ஒரே பாடத்திட்டத்தை மாநில அரசு புகுத்த உள்ளதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் தமிழ்நாடு அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரம் கேள்விக்குள்ளாகும் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவசர கதியில் திணிக்கப்படும் பொதுப்பாட திட்டத்தால் தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரம் கேள்விக்குறியாகும் என்று கூறியுள்ள அவர், இதனால் பல்கலைக்கழக மானிய குழுவால் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 45 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்பட்டு வரும் தன்னாட்சி அந்தஸ்தை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே கல்வித்துறையில் மாற்றம் கொண்டுவரும் முன்பே கட்சி கண்ணோட்டம் இல்லாத கல்வியாளர்களை ஆலோசித்து எதிர்கால இளைஞர்களின் நலனை மனதில் நிறுத்தி உயர்கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.