புதுடெல்லி: ‘வழக்குகளை அவசரமாக பட்டியலிடவும், விசாரணை செய்யவும் வெறும் வாய்மொழி கோரிக்கைகள் அனுமதிக்கப்படாது. இமெயில் அல்லது எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்க வேண்டும்’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள சஞ்சீவ் கண்ணா தனது முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டார்.
அதில் அவர், ‘‘நீதித்துறை ஒரு ஒருங்கிணைந்த, ஆனால் நிர்வாக அமைப்பின் தனித்துவமான மற்றும் சுதந்திரமான அமைப்பு. மக்களின் அந்தஸ்தை பொருட்படுத்தாமல் அவர்களுக்கு நீதி கிடைப்பதையும், சமமாக நடந்துவதையும் உறுதி செய்வது நீதித்துறையின் அரசியலமைப்பு கடமை. நீதித்துறையின் சீர்த்திருத்தங்கள், மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். மக்கள் எளிதாக நீதிமன்றத்தை அணுகும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்’’ என்றார்.
இதில், அவசர வழக்குகள் குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ‘‘வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகளை அவசரமாக பட்டியலிடவும், விசாரணை செய்வதற்கும் வாய்மொழியாக மட்டும் கோரிக்கை விடுப்பது செல்லாது. அதற்கு அவர்கள் இமெயில் அல்லது எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்க வேண்டும்’’ என்றார். உச்ச நீதிமன்றத்தில் பொதுவாக வழக்குகளை அவசரமாக விசாரிக்கவும், பட்டியலிடவும் வழக்கறிஞர்கள், அன்றைய தினத்தின் தொடக்கத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக ஆஜராகி வலியுறுத்துவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.