துரைப்பாக்கம்: பெரும்பாக்கம் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் லிப்ட் இயங்காததை கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்கள் பொறியாளர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். சென்னை அடுத்த பெரும்பாக்கம் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய 8 மாடி குடியிருப்பு கொண்ட 185 பிளாக்குகளில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் சில பிளாக்குகளில் பல மாதமாக லிப்ட்கள் செயல்படவில்லை. மேலும், அடிக்கடி மின் தடையும் ஏற்படுகிறது. ஜெனரேட்டர்கள் பழுதால், மின்தடையின் போது முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் படி ஏற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால், நேற்று இரவு செம்மஞ்சேரியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். அலுவலகத்திற்குள் பணி செய்து கொண்டிருந்த பொறியாளர்கள், ஊழியர்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் சிறை பிடிக்கப்பட்டனர்.தகவறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் நாளை, பழுதடைந்த மின் தூக்கிகள் செயல்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.