தண்டையார்பேட்டை: பிராட்வேயில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இடத்தில் வீடுகளை இடிக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி 5வது மண்டலம், 56வது வார்டுக்கு உட்பட்ட பிராட்வே பி.ஆர்.கார்டன் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் பழுதடைந்து இருந்த காரணத்தால் இடித்துவிட்டு புதிதாக 9 மாடியில் 450 வீடுகள் கட்டுவதற்காக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவு செய்தது.
இதற்காக அங்கிருந்த 350 குடும்பத்தினருக்கு தற்காலிக ஆணை வழங்கி வெளியில் வாடகையில் இருப்பதற்காக 24,000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர்களை அங்கிருந்து காலி செய்து விட்டனர். மேலும் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காலி செய்யாமல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவர்களுக்கு முறையாக காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் சென்னை உயர் நீதிமன்றம் இந்த இடத்தில் உள்ள குடியிருப்புகளை அகற்றி 17.12.2024 அன்று வழங்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் நேற்று மாநகராட்சி மண்டல அதிகாரி பரிதாபானு, பகுதி செயற்பொறியாளர் லோகேஸ்வரன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் ஆகிய உதவியுடன் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்தபோது அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். துறைமுகம் உதவி ஆணையர் ராஜசேகர், முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் ஜானகிராமன், பூக்கடை காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு பெண் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்து தீக்குளிக்க போவதாக மிரட்டினார். காவல்துறையினர் அந்த பெண்ணை அங்கிருந்து தடுத்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தீயணைப்பு வண்டி மற்றும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பி.ஆர். கார்டன் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 350 வீடுகளில் இருந்தது. அதனை இடித்துவிட்டு தற்போது 450 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பார்க்கிங் வசதி, லிப்ட் வசதியுடன் ஒன்பது மாடி கொண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது. நீதிமன்றம் இந்த இடத்தில் உள்ள குடியிருப்பு வாசிகளை அப்புறப்படுத்தி காலி இடத்தை வழங்க உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் 17ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று கூறியது. அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படுகிறது. அனைத்து வீடுகளும் இடிக்கப்பட்டு இடம் ஒப்படைக்கப்படும். அதேபோல் இங்கு குடியிருப்பவர்களுக்கு உரிய ஆவணம் வைத்துள்ளவர்கள் அனைவருக்கும் வீடு வழங்கும் தற்காலிக ஆணை வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.