திருமலை: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷங்கர்பள்ளி ரயில்வே கேட் அருகே ஒரு பெண் முககவசம் அணிந்து காரை தண்டவாளத்தில் நேற்று காலை வேகமாக ஓட்டி சென்றார். இதை பார்த்த ரயில்வே ஊழியர்கள், அவரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த பெண் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். அப்போது இந்த தண்டவாளம் வழியாக பெங்களூருவில் இருந்து ஐதராபாத் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இதைபார்த்த ரயில் ஊழியர்கள் உடனே அந்த ரயிலின் லோகோ பைலட்டுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் லோகோ பைலட் ரயிலை நடுவழியில் நிறுத்தினார். திடீரென ரயில் நிறுத்தப்பட்டதால் ரயிலில் இருந்த பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து ஷங்கர்பள்ளி போலீசார், ரயில்வே ஊழியர்கள் பொதுமக்கள் இணைந்து தண்டவாளத்தில் காரை ஓட்டி சென்ற இளம்பெண்ணை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் காரில் இருந்து அந்த பெண்ணை வெளியே அழைத்து வந்தனர். காரை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. காரில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் இந்தியில் முன்னுக்குபின் முரணாக பேசினார். விசாரணையில் 34 வயதான அவர் உ.பியை சேர்ந்தவர் என்பதும் அவர் ஐதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அண்மையில் வேலை பறிபோனதால் அதிர்ச்சியில் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இவர் எதற்காக தண்டவாளத்தில் காரை ஓட்டி சென்றார், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.