ராம்பூர்: உ.பி மொராதாபாத்தில் வசித்த சஜித் (23), பப்லு ஆகியோர் மீது போலீசில் பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ராம்பூர் மாவட்டம் பட்வாய் நகர போலீசார் பசுவதை தடுப்பு சட்டத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். நேற்று முன் தினம் இரவு சஜித் மற்றும் பப்லு ஆகியோர் மொராதாபாத்திலிருந்து வாகனம் மூலம் பட்வாய் நகருக்கு வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சாலையில் தடுப்புகளை அமைத்து வாகன சோதனை செய்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு கார் போலீசை கண்டதும், வேகமாக திரும்பி சென்றது.
போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டில் கவிழ்ந்தது. காரிலிருந்து வெளியே வந்த சஜித், பப்லு போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் திருப்பி சுட்டதில் இருவருக்கும் குண்டு காயம் ஏற்பட்டு பிடிபட்டனர். அவர்கள் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனளிக்காமல் சஜித் இறந்தார். பப்லுவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களது கார், நாட்டு கைத்துப்பாக்கி, தோட்டா, எடை மெஷின் ஆகியவை கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.