கோண்டா: உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்ட பாஜ அலுவலகத்திற்கு வந்த பெண் ஒருவருடன் மாவட்டத் தலைவரான அமர் கிஷோர் காஷ்யப் என்பவர் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கட்சி அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவியில் பதிவான காட்சிகளின் வீடியோவில், மாவட்ட தலைவர் காஷ்யப் பெண் ஒருவருடன் மாடிப் படிக்கட்டுகளில் ஏறும்போது அவரை கட்டிப் பிடித்துக் கொண்டு, தோளில் கை போட்டு நடப்பது போன்ற காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோவை எதிர்க்கட்சித் தலைவர்கள் பகிர்ந்து, காஷ்யப்பின் நடத்தையை கடுமையாக விமர்சித்தனர். வைரல் வீடியோ குறித்து காஷ்யப் வெளியிட்ட பதிவில், ‘வீடியோவில் இருக்கும் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருக்கு உதவுவதற்காகவே அவரது கையைப் பிடித்தேன். அவரை தவறான கண்ணோட்டத்தில் தொடவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பாஜ மாநில பொதுச் செயலாளர் கோவிந்த் நாராயண் ஷுக்லா வெளியிட்ட பதிவில், ‘மாவட்ட தலைவர் அமர் கிஷோர் காஷ்யப், கட்சி அலுவலகத்திற்குள் நடந்து கொண்ட நடத்தையானது, அவரது ஒழுக்கமற்ற செயலை காட்டுகிறது. இந்த சம்பவத்திற்கு அடுத்த ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். உங்களிடம் இருந்து திருப்திகரமான பதில் வரவில்லை என்றால், கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.