சென்னை: அனைத்து தெரு, சர்வே எண்களுக்கும் வழிகாட்டி மதிப்பானது மாற்றியமைக்கப்படவில்லை. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பானது பதிவுத்துறையின் இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் வழிகாட்டி மதிப்புகள் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரடியிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பை விட மிக மிக குறைவாக உள்ளன. எனவே கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏற்கனவே, அதாவது 2017ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி இருந்த வழிகாட்டி மதிப்பிற்கு மாற்றியமைக்கப்பட்டது.
மனையிடங்களின் வழிகாட்டி மதிப்பு மிக மிக குறைவாக இருந்ததால் வங்கிகளில் சொத்தின் மதிப்பிற்கு ஏற்றாற் போல் கடன் பெற முடியவில்லையென கடந்த ஜூலை 27ம் தேதி நடைபெற்ற பதிவுத் துறை கருத்து கேட்பு கூட்டத்தில் கட்டடம் கட்டி விற்போர் சங்க பிரதிநிதிகளும், மனைப்பிரிவு ஏற்படுத்தி விற்போர் சங்க பிரதிநிதிகளும் தெரிவித்தனர். எனவே, மனையிடங்களின் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட வேண்டும் என்று ஏகமனதாக கோரிக்கை வைத்தனர். மேலும் விளைநில மதிப்பும் சில இடங்களில் மிக மிக குறைவாக உள்ளதாக தெரிவிக்கப் பட்டது. இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு படி பதிவுத்துறை தலைவர் தலைமையில் வழிகாட்டி மதிப்பை சீரமைக்க மைய மதிப்பீட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் ஆணையர் (நகர ஊரமைப்பு இயக்கம்), முதன்மை பொறியாளர் (கட்டடம்) பொதுப்பணித்துறை, இணை ஆணையர் (நில நிர்வாகம்), ஆணையர் (நகராட்சி நிர்வாகம்), இயக்குநர் (பேரூராட்சி), இயக்குநர், (ஊரக வளர்ச்சி), ஆணையர் (நில அளவை மற்றும் பதிவேடுகள்), பிரதிநிதி-(சென்னை மாநகர வளர்ச்சி குழுமம்), துணை ஆணையர் (சென்னை மாநகராட்சி), பிரதிநிதி-(வருமானவரித்துறை), முதன்மை பொறியாளர் (நீர்பாசனம்) பொதுப்பணித்துறை, கூடுதல் பதிவுத்துறை தலைவர் (வழிகாட்டி), பிரதிநிதி-(மதிப்பீட்டாளர் சங்கம்), பிரதிநிதி (தமிழ்நாடு தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு) ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். மைய மதிப்பீட்டுக்குழு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி கூடி இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, கிராமப் பகுதிகளில் உள்ள மனையிடங்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த குறைந்தபட்ச மதிப்பை விட குறைவாக கொண்டுள்ள தெரு, சர்வே எண்களுக்கு மட்டுமே இம்மதிப்பு மாற்றியமைக்கப்பட்டது. அனைத்து தெரு, சர்வே எண்களுக்கும் வழிகாட்டி மதிப்பானது மாற்றியமைக்கப்படவில்லை. எனவே, ஒரு சில ஊடகங்களில் முன்னறிவிப்பின்றி வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது என்று வந்துள்ள செய்தி தவறான செய்தி ஆகும். தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பானது http://tnreginet.gov.in என்ற பதிவுத்துறையின் இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக மேலேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவுத்துறை தலைவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.