அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தொடக்க விழா நேற்று பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் உள்ள முதலாவது நீரேற்று நிலையத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பின் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அளித்த பேட்டி: திமுக அரசு அமைந்த பிறகு இத்திட்டத்தில் இருந்த தடைகளை எல்லாம் நீக்குவதற்கு முதல்வர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பணிகள் நிறைவு பெற்றது. நிலம் கிடைக்கவும், பணிகளை முழுவீச்சில் முடிப்பதற்கும் காரணமாக இருந்தவர் முதல்வர் தான்.
அதே போல, நீர்வளத்துறை அமைச்சரும் ஒவ்வொரு நாளும் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டு தெரிந்து கொண்டு வந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக திட்டம் நிறைவேற விவசாயிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். பணி முடிந்ததும் இனி திட்டத்தை நிறைவேற்றிவிடலாம் என்று கருதிய போது போதிய அளவுக்கு உபரிநீர் வரவில்லை. உபரிநீர் கொண்டு தான் செயல்படுத்த முடியும். எனவே, குறைந்த அளவில் வந்த உபரிநீரை வைத்து 83 பீடர்லைன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 980 கி.மீ தூரம் கொண்ட இந்த பீடர்லைன் மூலம் தான் 1045 குளங்களுக்கும் தண்ணீர் சப்ளை செய்ய முடியும். அப்போது தான் பீடர்லைனில் ஆங்காங்கே குழாய்கள் உடைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் இரவு பகலாக பணியாற்றி குழாய் உடைப்புகளை சரி செய்தனர்.
அதன் பிறகு உபரிநீர் வரத்தும் குறைந்து விட்டது. தற்போது தான் உபரிதண்ணீர் கிடைத்துள்ளது. இன்றைக்கு 1045 குளங்களில் சில குளங்களை தவிர மற்ற அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்வதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். உபரிநீர் வராமல் பணிகளை முழுமையாக முடிக்காமல் அண்ணாமலை சொல்வது போல திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் இத்திட்டம் தோல்வி என்று அரசை தான் குறைகூறி இருப்பார்கள். ஆகஸ்ட் 15ம் தேதி கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு அதில் வரும் கசிவு நீரை வைத்து 70 நாட்களுக்கு 1.50 டிஎம்சி வழங்க முடியும் என்ற அதிகாரிகளின் நம்பிக்கையின் அடிப்படையில் இத்திட்டம் இன்றைக்கு முதல்வரால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த அரசு ஒரு நாள் கூட வீணடிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று முதன்முதலில் யோசித்தவரே கலைஞர் தான். அரசியலுக்காக இதை நான் சொல்லவில்லை. இது எல்லாருக்கும் தெரியும். எனவே கலைஞருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். போராட்டம் அறிவித்த காரணத்தால் தான் இன்றைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். இது மிகவும் தவறானது. உபரிநீர் வந்த காரணத்தால் தான் திட்டம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
* டிராபிக் ராமசாமி இல்லாத தைரியம் ஜெயக்குமாருக்கு அமைச்சர் சாமிநாதன் பதில்
அத்திக்கடவு- அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும் அதற்கு திமுக சொந்தம் கொண்டாடுகிறது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தது பற்றி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், டிராபிக் ராமசாமி இல்லாத தைரியத்தில் ஜெயக்குமார் இதுபோல பேசுகிறார் என்றார். கொரோனா பரவலின் போது அமைச்சராக இருந்த ஜெயக்குமார் மாஸ்க் அணியாமல் இருந்தது பற்றி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில புகார் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
* ‘கொங்கு மக்களுக்காக அண்ணாமலை எதையும் செய்யவில்லை’
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ, நேற்று சேலத்தில் அளித்த பேட்டி: அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதால், கொங்கு பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி. அண்ணாமலை போராட்டம் அறிவித்த பின்னர்தான் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என கூறுவது, வேடிக்கையானது. அண்ணாமலையின் போராட்ட அறிவிப்புக்கு முன்பே முதல்வர் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை தொடங்குவதற்கு திட்டமிட்டிருந்தார் என்பதற்கு நானே சாட்சி. கொங்கு நாட்டை சேர்ந்த அண்ணாமலை இந்த திட்டத்திற்காக ஒரு துரும்பு எடுத்து போட்டாரா? அல்லது ஒரு கோரிக்கையாவது வைத்தாரா?
நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டார். அப்போது எண்ணற்ற கோரிக்கைகளை செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் ஒன்றையாவது நிறைவேற்றிக் கொடுத்திருப்பாரா? அவர் கொங்கு பகுதி மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. கோவைக்கு எய்ம்ஸ், மெட்ரோ ரயில், ஜவுளித்தொழில் பாதிப்பு என ஏதாவது ஒரு விவகாரத்திற்காவது, அண்ணாமலை டெல்லியில் பேசி நடவடிக்கை எடுத்தாரா?. ஆனால், அத்திக்கடவு திட்டம் நிறைவேறும் என முன்னரே தெரிந்து வைத்துக் கொண்டு, அதற்கேற்ப அரசியல் செய்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.