ஜான்சி: உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பலியான சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த விபத்தில் 16 குழந்தைள் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. பந்தல்கந்த் பிராந்தியத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான இங்கு பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் (என்ஐசியு) 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.45 மணி அளவில் என்ஐசியுவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள பல மருத்துவ உபகரணங்கள் மீது தீ மளமளவென பரவியது. மருத்துவ ஊழியர்கள் தீயை அணிக்க முடியாமல் திணறிய நிலையில், தகவலறிந்து போலீசாரும், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், ஐசியுவின் உட்பகுதி முழுவதுமாக எரிந்த அங்கிருந்த 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தன.
ஐசியுவின் வெளிப்பகுதியில் இருந்த குழந்தைகள் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டன. தகவலறந்ததும், துணை முதல்வர் பிரஜேஷ் பதக் மற்றும் டிவிஷனல் கமிஷனர் பிமல் குமார் துபே, போலீஸ் எஸ்பி (எஸ்எஸ்பி) சுதா சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். விபத்து குறித்து மாவட்ட கலெக்டர் அவினாஷ் குமார் அளித்த பேட்டியில், ‘‘ஐசியுவின் உட்பகுயில் சுமார் 30 குழந்தைகள் இருந்தன.
அதில், தீ விபத்தில் 10 குழந்தைகள் பலியாகி உள்ளனர். 16 குழந்தைகள் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’’ என்றார். பலியான 10 குழந்தைகளும் 3 அல்லது 4 நாட்களுக்கு முன் பிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக உபி அரசு அறிக்கை தர தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது .
இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்த உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். டிவிஷனல் கமிஷனர் மற்றம் எஸ்எஸ்பி ஆகியோர் 12 மணி நேரத்தில் விசாரணை அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையும் தனியாக விசாரணை நடத்தி அறிக்கை தர முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
* ரூ.2 லட்சம் நிவாரண நிதி பிரதமர் மோடி அறிவிப்பு
இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பலியான குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்த குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். இதே போல, மாநில அரசு சார்பில் பலியான குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
* உடனடி நடவடிக்கை: ராகுல் வலியுறுத்தல்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பதிவில், ‘‘ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீ விபத்தில் அப்பாவி பச்சிளம் குழந்தைகள் பலியான செய்த மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து உபி அரசு தீவிர விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘இதுபோன்ற துயரமான சம்பவங்கள் உபியில் அடுத்தடுத்து நிகழ்ந்து வருவது மாநில அரசு மற்றும் நிர்வாகத்தின் கவனக்குறைவு குறித்து கடுமையான சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. காயமடைந்த குழந்தைகளுக்கு சிறந்த சிகிச்சை கிடைப்பதை மாநில அரசு உறுதி செய் வேண்டும். உடனடியாக தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்’’ என்றார்.
* மற்ற குழந்தைகளை காப்பாற்றி தனது 2 குழந்தைகளை பறிகொடுத்த தந்தை
தீ விபத்து நடந்த சமயத்தில் ஐசியு வார்டின் வெளியே, சிகிச்சை பெற்ற குழந்தைகளின் பெற்றோர் பலரும் இருந்துள்ளனர். அவர்களில் யாகூப் மன்சூரி என்பவரின் 2 பெண் குழந்தைகள் சிகிச்சைக்காக சேர்த்திருந்தார். தீ விபத்து நடந்ததை பார்த்ததும் ஐசியு ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்த யாகூப் அங்கிருந்த சில குழந்தைகளை காப்பாற்றினார்.
ஆனால் யாகூப்பின் 2 குழந்தைகளையும் அவரால் காப்பாற்ற முடியவில்லை. தீயில் கருகிய குழந்தைகளின் சடலங்களில் இருந்து தனது 2 குழந்தைகளின் உடலை கூட அவரால் அடையாளம் காண முடியவில்லை என கதறி அழுதார். குழந்தையை பறிகொடுத்த பெற்றோர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத துயரத்தில் உள்ளனர். தீயில் கருகிய குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டும் கூட தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என சில பெற்றோர் இயலாமையுடன் கதறித் துடித்தனர்.
* காலாவதி தீயணைப்பானும் ஒலிக்காத சைரனும்
தீ விபத்து நடந்த ஐசியு வார்டுக்கு வெளியே 2 தீயணைப்பான் கருவிகள் இருந்ததாகவும், அவை காலாவதியானவை என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 2021ம் ஆண்டிலேயே காலாவதி ஆன தீயணைப்பான் கருவியை வைத்திருப்பதாகவும் சில வீடியோக்கள் வெளியாகின. மருத்துவமனையில் தீ விபத்து எச்சரிக்கை சைரன்களும் ஒலிக்கவில்லை என சிலர் குற்றம்சாட்டினர்.
இது குறித்து, துணை முதல்வர் பிரிஜேஷ் குமார் அளித்த பேட்டியில், ‘‘மருத்துவமனையில் இருந்த தீ தடுப்பு கருவிகள் அனைத்தும் சரியான முறையில் இருக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் இங்கு தீ பாதுகாப்பு தணிக்கை செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் தீ தடுப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன’’ என்றார்.