உத்திரப் பிரதேசம்: உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராசில் 121 பேரை பலி கொண்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு மர்ம நபர்கள் நச்சு திரவத்தை தெளித்ததே காரணம் என்று போலே பாபா சாமியார் வழக்கறிஞர் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி போலே பாபா என்ற சாமியாரின் பிரசங்க நிகழ்ச்சியில் திடீரென நெரிசல் ஏற்பட்டது. அப்போது அப்பாவி பொதுமக்கள் 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்த நிலையில், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சுமார் 15 பேர் முகத்தை மறைத்தபடி கூட்டத்திற்குள் புகுந்து நச்சு திரவத்தை தெளித்தனர் என்று சாமியாரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளார். இதுவே 121 பேர் மரணமடைய காரணமாகி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த மர்ம நபர்கள் 15 பேர் தப்பிச் செல்வதற்காக வாகனங்களும் தயார் நிலையில் இருந்ததாக சாமியாரின் வழக்கறிஞர் கூறியுள்ளார். இறந்தவர்கள் மூச்சு திணறிதான் இறந்தார்கள் என்றும் மிதிபட்ட காயத்தால் இறக்கவில்லை என்றும் ஏ.பி.சிங் விளக்கம் அளித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆராயுமாறு சாமியாரின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார். 121 கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த வழக்கில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்பட 9 பேர் கைதாகி உள்ளனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை டிப் -டாப் சாமியார் போலே பாபாவின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டவில்லை. அத்துடன் 2ம் தேதி முதல் அவர் எங்கு உள்ளார் என தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.