புதுடெல்லி: இந்தியாவில் குழந்தை கடத்தலில் உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2013ம் ஆண்டு முதல் ஜூலை 30ம் தேதியை ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினமாக தேர்ந்தெடுத்துள்ளது. அதன்படி நேற்று ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை உள்ளிட்ட தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆய்வு செய்து ‘இந்தியாவில் குழந்தை கடத்தல்: சூழ்நிலை தரவு பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தலையீட்டு உத்திகளின் தேவை‘ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வௌியிட்டுள்ளன. அந்த அறிக்கையில், “2016 முதல் 2022ம் ஆண்டு வரை உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் குழந்தைகள் கடத்தலில் முதல் 3 இடங்களில் உள்ளன.
இந்த காலகட்டத்தில் 21 மாநிலங்களிலுள்ள 262 மாவட்டங்களில் குழந்தைகள் கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளன. 2016 முதல் 2022 வரை 13,549 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 80 சதவீதம் பேர் 13 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள். 13 சதவீதம் பேர் 9 முதல் 12 வயதுடையவர்கள். 2 சதவீதம் பேர் 9 வயதுக்கு குறைவானவர்கள். தலைநகர் டெல்லியில் கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் இருந்தே குழந்தைகள் கடத்தல் 68% அதிகரித்து உள்ளது.
கொரோனா தொற்றுக்கு முன் 2016 முதல் 2019 வரை உத்தரபிரதேசத்தில் 267 குழந்தை கடத்தல் வழக்குகள் பதிவாகின. இது கொரோனாவுக்கு பின் 2021-22ல் 1,214ஆக அபாயகரமாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் 18 மடங்கு உயர்ந்து 6 முதல் 110 குழந்தை கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளன. ஆனால் கடந்த காலங்களில் அரசுகள் எடுத்த சட்ட நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரசாரங்கள் குழந்தைகள் கடத்தலை குறைத்துள்ளன” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.