*திருவையாறு விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர் : திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால், கோடை பயிரான எள் 5000 ஏக்கர் நீரில் மூழ்கியது. இதில் 2000 ஏக்கர் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அறுவடை செய்தால் கூடுதலாக இரட்டிப்பு செலவை எதிர்கொள்ள நேரிடும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு சுற்றுவட்டார பகுதியான அந்தணர் குறிச்சி, தில்லை ஸ்தானம், பெரும்பலியூர், சாத்தனூர், அச்சனூர், புணவாசல், விளாங்குடி, செம்மங்குடி, அணைக்குடி, காருக்குடி, கஸ்தூரிபாய் நகர் உள்ளிட்ட பகுதியில் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் கோடை பயிரான எள் சாகுபடி செய்து இருந்தனர்.
அறுவடைக்கு 10 நாட்கள் உள்ள நிலையில் திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பு பருவம் தவறி அதிக கன மழை பெய்ததால் எள் பயிரை மழை நீர் சூழ்ந்து வடியாமல் 10 நாட்கள் ஆகியும் நின்று வருகிறது. இதனால் எள் செடி வேர் அறுந்து காய் பிஞ்சிலேயே பழுத்ததனால் எள் பொக்கையாக உள்ளது.
மகசூல் இல்லாமல் அனைத்தும் வயலிலே வீணாகிப் போனது. அவற்றை அறுவடை செய்ய கூடுதல் கூலி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் என்ன செய்வது என்று அறியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சில தினங்களாக பருவம் தவறி பெய்த மழையால் நடவு செய்யப்பட்ட எள் பயிர்கள் முற்றிலும் வீணாகும் நிலையில் உள்ளது. எள்ளை வயலிலே மடக்கி உழுது நடவு பணியை மேற்கொள்ளலாம் என எண்ணி வருகிறோம்.
சிலர் எள் பயிரை பார்க்க முடியாமல் ஆடுகளை வைத்து மேய்த்தும் வருகிறார்கள். சிலர் கிடைப்பது கிடைக்கட்டும் என எண்ணி அவற்றை அறுவடை செய்து வருகிறார்கள். திருவையாறு பகுதியில் முற்றிலுமாக 2000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள எள் பயிர் சேதம் அடைந்துள்ளது.
ஏக்கருக்கு செலவு செய்தது போக 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கக்கூடிய முதலும் போய் உள்ளது. சென்ற வருடம் வெப்பத்தின் தாக்கத்தினால் கருகி நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த வருடம் வரலாறு காணாத வகையில் பெய்த கன மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் வேரறுந்து சாய்ந்து காய்ந்து பொக்கையாக போனது வேதனை அளிக்க கூடிய வகையில் அமைந்துள்ளனர்.
மேலும் திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் பயிறு உளுந்து சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பு பயிரிடப்பட்ட செடிகளும் மழை நீரில் மூழ்கி அழுகி காயத் தொடங்கி உள்ளனர். என்ன செய்வது என்று அறியாமல் தவித்து வருகிறோம் என விவசாயிகள் புலம்பி தீர்க்கிறார்கள். தமிழக அரசு நேரடியாக ஆய்வு செய்து ஏக்கருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.