கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தனக்கனந்தல் ஊராட்சியில் நேற்று முன்தினம் ஊராட்சியின் மூலம் விநியோகம் செய்த குடிநீர் குடித்ததில் 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஊராட்சி செயலர் ஜெகநாதன் முறையாக பராமரிக்காமல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வெங்கட்ராமன் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பினார். ஜெகநாதன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதன்படி ஊராட்சி செயலர் ஜெகநாதனை திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.